சென்னை:'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். அத்துடன் குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக வாங்கப்பட்ட 90 டிராக்டர்களின் இயக்கத்தை, முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.மண் வளத்தை பேணி காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான, இயற்கை வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளை ஊக்கப்படுத்தவும், நடப்பாண்டு 206 கோடி ரூபாயில், 22 இனங்களுடன், 'முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என, இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.இத்திட்டத்தின் கீழ், முதல் இனமாக பசுந்தாள் உர விதை வினியோகம் அறிவிக்கப்பட்டுள்ளது. மண்ணில் வளர்ந்து, மண்ணிலே மக்கி, மண்ணின் வளம் பெருக்குவது பசுந்தாளுரப் பயிர்கள். இதன் சாகுபடியை விவசாயிகளிடம் ஊக்குவிக்க, முதல் கட்டமாக நடப்பாண்டு 2 லட்சம் ஏக்கரில், 20 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.நேற்று தலைமைச் செயலகத்தில், விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்தார். இதில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறுவர். விவசாயிகள் வேளாண் பணிகளை தடையின்றி செய்வதற்காக, டிராக்டர்கள், ரோட்டவேட்டர்கள், இயந்திர கலப்பைகள், கரும்பு அறுவடை இயந்திரங்கள், நெல் அறுவடை இயந்திரங்கள், 25 கோடி ரூபாயில் கொள்முதல் செய்யப்படும். அவை தேவைப்படும் விவசாயிகளுக்கு, 'இ - வாடகை' மொபைல் ஆப் வழியே, குறைந்த வாடகைக்கு விடப்படும் என, கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.அதன்படி, வேளாண் பொறியியல் துறை சார்பில், 10.25 கோடி ரூபாயில், 90 டிராக்டர்கள், 180 கொத்து கலப்பைகள், 90 ரோட்டவேட்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இவற்றை விவசாயிகள் பயன்பாட்டிற்கு வழங்கும் விதமாக நேற்று டிராக்டர்களின் இயக்கத்தை முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார். வேளாண் இயந்திரங்களை இயக்க, திறன் வாய்ந்த டிரைவர்களை உருவாக்க, 500 ஊரக இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக, 1 கோடி ரூபாயில் வாங்கப்பட்ட இயந்திரங்களின் பயன்பாட்டையும் முதல்வர் நேற்று துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நேரு, பொன்முடி, பன்னீர்செல்வம், ராஜ கண்ணப்பன், வேளாண் துறை செயலர் அபூர்வா, சிறப்பு செயலர் சங்கர், இயக்குனர் முருகேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.