சென்னை: தமிழகத்தில் தனிநபர் மின் நுகர்வு, 2023 - 24ல், 152 யூனிட்கள் உயர்ந்து, 1,792 யூனிட்களாக அதிகரித்துள்ளது.தமிழகம் முழுதும் அனைத்து பிரிவுகளுக்கும் மின் வினியோகம் செய்யும் பணியை, மின் வாரியம் மட்டுமே மேற்கொள்கிறது. தமிழகம் முழுதும் ஒரு நாள் அதாவது, 24 மணி நேரமும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு, மின் நுகர்வு எனப்படுகிறது. இது, தினமும் சராசரியாக, 30 கோடி யூனிட்களாக உள்ளது. கோடை காலத்தில் அதிகரிக்கிறது. அதன்படி, இந்தாண்டு ஏப்., 20ல் எப்போதும் இல்லாத அளவாக, 45.43 கோடி யூனிட்களாக அதிகரித்தது. மின் வாகனம், 'ஸ்மார்ட் போன், லேப்டாப், ஏசி' உள்ளிட்ட சாதனங்களின் பயன்பாடு, புதிய கட்டுமானம் உள்ளிட்ட காரணங்களால், மின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஓராண்டில் மாநிலம் முழுதும் பயன்படுத்திய மொத்த மின் பயன்பாட்டை, மொத்த மக்கள் தொகையால் வகுத்தால், தனிநபர் மின் பயன்பாடு கிடைக்கும். இது, 2023 - 24ல், 1,792 யூனிட்களாக அதிகரித்தது. முந்தைய ஆண்டில் தனிநபர் மின் நுகர்வு, 1,640 யூனிட்களாக இருந்தது. கடந்த ஆண்டில் மட்டும் கூடுதலாக, 152 யூனிட்கள் அதிகரித்துள்ளன.
ஆண்டு வாரியாக
தனிநபர் மின் நுகர்வு/ யூனிட்கள்ஆண்டு - தனிநபர் மின் நுகர்வு யூனிட்கள்2011/ 12 - 1,0652012/ 13 - 1,0112013/ 14 - 1,1962014/ 15 - 1,2282015/ 16 - 1,2802016/ 17 - 1,3402017/ 18 - 1,3892018/ 19 - 1,4672019/ 20 - 1,5152020/ 21 - 1,4642021/ 22 - 1,5932022/ 23 - 1,6402023/ 24 - 1,792* கடந்த, 2020 - 21ல் கொரோனா ஊரடங்கால், தொழில் நிறுவனங்கள் முடங்கியதால், ஒட்டுமொத்த அளவில் மின் பயன்பாடு குறைந்திருந்தது.