மேட்டூர்: கர்நாடகாவின் கபினி அணை நீர்வரத்து, 6,500 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீருக்கு, 300 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.கபினி அணை கர்நாடகா மாநிலம் மைசூரு மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. அணையின் மொத்த நீர்மட்டம், 65 அடி. நீர் இருப்பு, 19.5 டி.எம்.சி.,யாகும். மொத்தம், 230 கி.மீ., துாரம் பாயும் இந்த நதி கர்நாடகாவின் டி.நரசிபுராவில் காவிரியில் கலந்து தமிழகத்துக்கு வருகிறது.கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கோடைமழை பெய்ததால் கடந்த 21ல், 841 கனஅடியாக இருந்த கபினி நீர்வரத்து நேற்று, 4,356 கனஅடியாகவும், 6,500 கனஅடியாகவும் அதிகரித்தது.அணையில் இருந்து குடிநீருக்காக, 300 கனஅடி நீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து உயர்வால் நேற்று, 6.71 டி.எம்.சி.,யாக இருந்த அணை நீர் இருப்பு, 7.5 டி.எம்.சி.,யாக உயர்ந்தது.மொத்தம், 49.5 டி.எம்.சி., நீர் கொள்ளளவு கொண்ட கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., அணைக்கு நேற்று முன்தினம்,1,971 கனஅடியாக இருந்த நீர்வரத்து, 2,500 கனஅடியாக அதிகரித்தது.வரும் நாட்களில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையின் அளவை பொறுத்து கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.