3 ஆண்டில் 2,500 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் அறநிலையத்துறை அமைச்சர் பேட்டி
மயிலாடுதுறை:தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் 2,005 கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.மயிலாடுதுறை மாவட்டம், பரசலுார் கிராமத்தில் நேற்று நடந்த வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின், பல ஆண்டுகளாக அனுமதி கிடைக்காமல் இருந்த தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட 118 கோவில்களுக்கு அனுமதி தரப்பட்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. மாநிலம் முழுவதும் இன்றுடன் (நேற்று) 2005 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. ஆதீனங்கள் ஒரு சேர இந்த ஆட்சியோடு இணக்கமாக இருந்து ஆதரிப்பதும், இதுபோன்று கும்பாபிஷேகங்களில் பங்கேற்பதும் கடந்த காலங்களில் இல்லை.முத்தமிழ் முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அனைவரும் ஆதரிப்பார்கள் என்று எப்படி சொல்ல முடியும்? ஜனநாயக நாட்டில் அவர்களின் கருத்தை கூறியுள்ளனர். விமர்சனங்களை உள்வாங்கிக் கொள்கிறோம் அதற்கு எதிர்வினையாற்ற தயாராக இல்லை.இந்த மாநாடு உலகமே பாராட்டும் வகையில் நடந்துள்ளது. இந்தியாவின் 18 மாநிலங்கள் மற்றும் 21 நாடுகளை சேர்ந்தோர் இம்மாநாட்டில் பங்கேற்றனர். இவ்வளவு பெரிய வரவேற்பு பெற்ற மாநாட்டை எப்படி எதிர்க்கட்சியினர் வரவேற்பார்கள். வசைபாடத்தான் செய்வாளர்கள்.கோவில் நிலங்களை பொருத்தமட்டில் இதுவரை ரூ. 6,750 கோடி மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. 1.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் ரோவர் கருவி உதவியுடன் அளவிடப்பட்டு அறநிலையத்துறையால் கல் பதித்து பாதுகாக்கப்பட்டுள்ளது.இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற தாரக மந்திரத்தோடு தொடர்ந்து ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்கும் பணியை இந்த ஆட்சி மேற்கொள்ளும். கோவில் நகைகளை உருக்கி டெபாசிட் செய்வதற்கு எதிர்ப்புகள் வந்தாலும், அது பயன்தரும் திட்டமாகவே உள்ளது. பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய நகைகளை தவிர்த்து பக்தர்கள் வழங்கும் புதிய நகைகள் மத்திய அரசின் தங்க உருக்கு ஆலையில் உருக்கி, அந்தந்த கோவில்கள் சார்பில் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. இதன் மூலம் கோவில்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடி வருமானம் வருகிறது. வட்டி தொகை பக்தர்கள் நலன் மற்றும் திருப்பணிக்கு செலவிடப்படுகிறது. மேலும் பல கோவில்களில் நகை மதிப்பீடு பணி நடைபெற்று வருகிறது. ஆண்டுக்கு ரூ. 15 கோடி வருவாய் வரும் அளவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.