உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை காமராஜ் பல்கலையில் 3 மாதங்களாக சம்பளமில்லை

மதுரை காமராஜ் பல்கலையில் 3 மாதங்களாக சம்பளமில்லை

மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் நிதி தட்டுப்பாடால் 3 மாதங்களாக பேராசிரியர்கள், அலுவலர்கள் சம்பளம் கிடைக்காமல் தவிக்கின்றனர். ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெற முடியாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தத்தளிக்கின்றனர்.இப்பல்கலையில் துணைவேந்தர் பணியிடம் மட்டுமின்றி, பதிவாளர், டீன், தொலைநிலைக் கல்வி இயக்குநர், கூடுதல் இயக்குநர் என முக்கிய பதவிகளும் காலியாக உள்ளன. இவற்றில் பேராசிரியர்கள் கூடுதல் பொறுப்பு வகிக்கின்றனர். இவர்களில் பலர் கடமைக்காக பதவியில் ஒட்டிக்கொண்டு காலத்தை கடத்தி வருவதால் பல்கலையில் நிலவும் பேராசிரியர், அலுவலர் சார்ந்த பிரச்னைகளை தீர்த்து வைக்க முடியவில்லை. பல்கலைக்கு நிதிஆதாரத்தை பெருக்கும் தொலைநிலைக் கல்வி பிரிவு உள்ளிட்டவை முடங்கி கிடக்கின்றன.ஜாதி, சங்கங்கள் ரீதியாக பேராசிரியர்கள், அலுவலர்கள் இப்பல்கலையில் பிரிந்து கிடக்கின்றனர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் மாறிமாறி புகார்கள் அனுப்பி தங்கள் பலத்தை நிரூபிக்கும் 'அரசியலில்' தான் மும்முரமாக உள்ளனர். இதனால் பல்கலை வளர்ச்சியே பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.துணைவேந்தர் இல்லாத நிலையில் பல்கலை செயல்பாடுகளை கண்காணிக்க நியமித்துள்ள கன்வீனர் குழுவும் முடங்கி வருகிறது. குழுத் தலைவரான கல்லுாரிக் கல்வி கமிஷனர் சுந்தரவள்ளி பெரும்பாலும் சென்னையில் முகாமிடுகிறார். இதனால் பல்கலை கண்காணிப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

திறமையின்மை

இதுகுறித்து பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது: நிதிப்பிரச்னைக்கு முக்கிய காரணம் பல்கலை நிர்வாகத்தை சரியாக வழிநடத்தத் தெரியாத அதிகாரிகளே. உயர் பதவிகளில் கூடுதல் 'பொறுப்பு' வகிப்பவர்கள் பல ஆண்டுகளாக பதவிகளில் தொடர்கின்றனர். இவர்களில் பலர் ஜூனியர்களாக உள்ளனர். அவர்களின் திறமையின்மையால் விதிமீறிய பதவி உயர்வுகள், பழைய ஓய்வூதிய திட்டத்திற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது, பல்வேறு நீதிமன்ற வழக்குகள், நிதித்துறை, உயர்கல்வி செயலாளர்கள் வழக்கில் தொடர்புபடுத்தியது உள்ளிட்ட சர்ச்சைகள் வெடித்தன.தணிக்கை தடைகளை களையவும் நடவடிக்கைகள் இல்லை. இதனால் அதிருப்தியடைந்த அதிகாரிகள் தரப்பு இப்பல்கலைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட மானியத்தை ரூ.58 கோடியில் இருந்து மறைமுகமாக ரூ.8 கோடியாக குறைத்துவிட்டது. இது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கு பேராசிரியர், அலுவலர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியமாக மட்டும் ரூ.12 கோடி தேவை. ஆனால் அதற்கான வருவாய்க்கு வழியில்லை.இதனால் கடந்தாண்டு டிசம்பர், இந்தாண்டு ஜனவரி, பிப்ரவரி என மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதனால் பேராசிரியர்கள், அலுவலர்கள், ஓய்வூதியர்கள் தவிக்கின்றனர். பல்கலை நிர்வாகத்தின் செயல்பாடுகளில் அதிருப்தியில் உள்ள தமிழக அரசும் நிதி ஒதுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. மாநில அரசை அணுகி, நிதித்தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், முக்கிய பதவிகளில் திறமையான பேராசிரியர்களை நியமித்தால் மட்டுமே பல்கலையை பாதுகாக்க முடியும். இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை