சென்னை: 'தமிழகம் வழியாக இலங்கைக்கு உயர் ரக கஞ்சா கடத்தப்படுவதன் பின்னணியில், மாவோயிஸ்ட்கள் உள்ளனர்' என, என்.சி.பி., எனப்படும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.சமீபத்தில், சென்னை மற்றும் மதுரைக்கு கடத்தி வரப்பட்ட, 4.05 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 729 கிலோ உயர் ரக கஞ்சாவை, என்.சி.பி., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, எட்டு பேரை கைது செய்துள்ளனர். தொடர் விசாரணையில், போதை பொருள் கடத்தல் பின்னணியில் மாவோயிஸ்ட்கள் இருப்பது தெரியவந்துள்ளது.இதுகுறித்து, என்.சி.பி., அதிகாரிகள் கூறியதாவது:இலங்கையில், உயர் ரக கஞ்சாவுக்கான தேவை அதிகம். இதனால், அந்நாட்டுக்கு கஞ்சா கடத்தும் நுழைவாயிலாகவே தமிழகம் மாறி விட்டது. இதற்காக, மாவோயிஸ்ட்கள், ஆந்திரா - ஒடிசா மாநில எல்லையில், ஜின்னகருவு என்ற மலை கிராம பகுதியை, கஞ்சா பதுக்கி வைக்கும் இடமாகவே மாற்றி விட்டனர். இந்த கிராமத்திற்குள் வெளி நபர்கள் செல்லவே முடியாத சூழல் உள்ளது. அப்படி இருந்தும், 2023ல், மாவோயிஸ்ட் சுந்தர்ராவ்,39 என்பவரை கைது செய்தோம். அவரிடம் இருந்து, 17 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1,760 கிலோ உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்ததோம். அதேபோல, மணிப்பூர், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட் மாநிலங்களில் உள்ளூர்வாசிகளை, மாவோயிஸ்ட்கள் கஞ்சா செடிகளை வளர்க்க ஊக்கப்படுத்தி வருகின்றனர். அம்மாநிலங்களில் இருந்தும், தமிழகத்திற்கு உயர் ரக கஞ்சா கடத்தல் நடக்கிறது.சமீபத்தில் பிடிபட்ட நபர்களிடம் விசாரித்தபோது, உயர் ரக கஞ்சா கடத்தல் பின்னணியில் மாவோயிஸ்ட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், அம்மாநில போலீசார் உதவியுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்