குறைந்த விலையில் மருந்து; முதல்வர் மருந்தகங்கள் 1,000 திறப்பு
சென்னை : மக்களுக்கு தரமான மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்க, மாநிலம் முழுதும், 1,000 முதல்வர் மருந்தகங்களை தமிழக அரசு அமைத்துள்ளது. இதில், 500 கூட்டுறவு துறையும், 500 தொழில் முனைவோரும் நடத்துகின்றனர். அவற்றில், மருந்துகளின் விலை வெளிச்சந்தையை விட 75 சதவீதம் குறைவு. கூட்டுறவு துறை சார்பில், சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின், முதல்வர் பேசியதாவது:இந்த மருந்தகங்களை சிறப்பாக செயல்படுத்த, மருந்தாளுனர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும், மானியம் மற்றும் தேவையான கடனுதவியை அரசு வழங்கியிருக்கிறது. இந்த மருந்தகங்களை அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம்., - டி.பார்ம்., முடித்தவர்களிடம் இருந்தும், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொழில் முனைவோருக்கு 3 லட்சம் ரூபாயும், கூட்டுறவு சங்கமாக இருந்தால் 2 லட்சம் ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது. இதனால், பி.பார்ம்., - டி.பார்ம்., படித்த 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. முதல்வர் மருந்தகங்களில் மக்களுக்கு, 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால், அதிக விலை கொடுத்து வாங்கக்கூடிய மருந்துகளை, குறைந்த விலையில் வாங்கி பயன் பெற முடியும். இது முதல் கட்டம் தான். அடுத்தடுத்து இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, படித்த இளைஞர்கள் சொந்தமாக தொழில் துவங்குவதற்கான அடித்தளம் அமைப்பதும் இதன் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பெரியகருப்பன், சேகர்பாபு, சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, கூட்டுறவு துறை செயலர் சத்யபிரதா சாஹு, பதிவாளர் நந்தகுமார் பங்கேற்றனர்.