'இலங்கையை கண்டித்து, தமிழக மீனவர்களைக் காக்க, ஒரு சிறு துரும்பைக் கூட பிரதமர்மோடி அசைக்கவில்லை' என, தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.தி.மு.க., தலைமை அறிக்கை:இந்த மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு துன்ப துயரங்களை ஏற்று, புயல், மழைக் காலங்களில் பாதிப்புகளுக்கு ஆளாகி வரும் மீனவர்களைக் காப்பதில், தி.மு.க., அரசு சிறப்பு கவனம் செலுத்தி வந்துள்ளது.மீன்பிடிக்கச் சென்று இலங்கை அரசால் பிடிக்கப்பட்டு, பல்வேறு கடற்படைத் தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 129 விசைப்படகு உரிமையாளர்களுக்கும், 26 நாட்டுப் படகு உரிமையாளர்களுக்கு தலா, 1.50 லட்சம் ரூபாய் என, மொத்தம், 6.84 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.மீன்பிடிக்கச் சென்று காணாமல் போகும் மீனவர்களின் குடும்பத்திற்கு, நாளொன்றுக்கு வழங்கப்படும் உதவித் தொகை, 250 ரூபாய் என்பது, 350 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இலங்கையில், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுப்பதற்கு, இந்தியாவில் என்னைப் போல துணிச்சலான பிரதமர் ஒருவர் இல்லை என, 2014ல் நடந்த ராமேஸ்வரம் பொதுக்கூட்டத்தில், மோடி பேசினார். அவர் பேசி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது தாக்கப்பட்டதை விட, 10 ஆண்டு காலத்தில் மீனவர்கள் அதிகமாக தாக்கப்பட்டு, அவர்கள் உடைமைகள் எல்லாம் சிறை பிடிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. ஒரு வார்த்தை கூட இலங்கையை கண்டித்து, தமிழக மீனவர்களைக் காக்க ஒரு சிறு துரும்பைக் கூட அசைக்கவில்லை மோடி.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.