உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வரின் அறிக்கையால் இசைக்கலைஞர்கள் அமைதி

முதல்வரின் அறிக்கையால் இசைக்கலைஞர்கள் அமைதி

சென்னை:டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள, 'சங்கீத கலாநிதி' விருதுக்கு, கர்நாடக இசைக்கலைஞர்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் அறிக்கைக்கு பின், அமைதியாகி உள்ளனர்.கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு, சென்னை மியூசிக் அகாடமி இந்தாண்டுக்கான, 'சங்கீத கலாநிதி' விருதை அறிவித்தது.இது, கர்நாடக இசை கலைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர்கள், தங்களின் சமூக வலைதளங்களில் அகாடமி மற்றும் விருதின் மாண்பு, ஏற்கனவே விருது பெற்றவர்களின் குரு - சிஷ்ய பரம்பரை, பக்தி நெறி மாறாத பாரம்பரிய இசையை கட்டிக்காத்த மாண்பு உள்ளிட்டவற்றை விளக்கினர்.

விமர்சனம்

இந்த விருதை, டி.எம்.கிருஷ்ணா பெறுவதால், ஏற்கனவே விருது பெற்றோருக்கு இழுக்கு ஏற்படுவதாகவும், சாஸ்த்ரிய சங்கீத நெறியை மீறுவோரை ஊக்கப்படுத்துவதாகவும் விமர்சித்தனர்.வேறு சிலர், இந்தாண்டு மியூசிக் அகாடமியில் கச்சேரி செய்வதில்லை என்றும், ஏற்கனவே பெற்ற விருதுகளை திருப்பி அளிப்பதாகவும் கண்டனத்தை பதிவு செய்தனர். இந்நிலையில், விருதுக்கு தேர்வான டி.எம்.கிருஷ்ணாவை வாழ்த்தி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:டி.எம்.கிருஷ்ணா சிறந்த பாடகர். அவர், மியூசிக் அகாடமியின் 'சங்கீத கலாநிதி' விருதுக்கு தேர்வாகி உள்ளார். அவருக்கு என் அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன்அவரின் முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளாலும், அவர் எளியோரை பற்றி தொடர்ந்து பேசி வருவதாலும், ஒரு தரப்பினர் காழ்ப்புணர்விலும், உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.இதில், மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும், பெண்களின் சம உரிமைக்காக, 75 ஆண்டுகள் அமைதி வழியில் போராடிய ஈ.வெ.ரா.,வை தேவையில்லாமல் வசைபாடுவது நியாயம் அல்ல. ஈ.வெ.ரா.,வின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், சிந்தனைகளையும் படித்தால், இப்படியான கருத்துகளை கூற மாட்டார்கள். இசைத்துறைக்கு, டி.எம்.கிருஷ்ணா ஆற்றிய பங்களிப்புகளுக்கு, உரிய மரியாதையையும், அங்கீகாரத்தையும் வழங்கும் வகையில், இந்த விருதுக்கு தேர்ந்தெடுத்துள்ள மியூசிக் அகாடமியின் நிர்வாகிகளை பாராட்டுகிறேன். டி.எம்.கிருஷ்ணா என்ற கலைஞனின் திறமையை யாராலும் நிராகரிக்க முடியாது.

பண்பு தான் தேவை

அரசியலில் மத நம்பிக்கைகளை கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலை கலக்க வேண்டாம். விரிந்த மானுடப்பார்வையும், வெறுப்பையும் விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புதான் இன்றைய தேவை. இவ்வாறு, முதல்வர் தன் அறிக்கையில் கூறி உள்ளார்.இந்த பாராட்டு அறிக்கையை அடுத்து, ஏற்கனவே விருது பற்றி விமர்சித்தவர்கள், தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கியதுடன், அதுபற்றி பேசுவதையும் நிறுத்திவிட்டு அமைதியாகி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ