உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை மோளப்பாளையம் அகழாய்வில் புதிய கற்கால கருவிகள் கண்டெடுப்பு

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் புதிய கற்கால கருவிகள் கண்டெடுப்பு

சென்னை : கோவை மாவட்டம் நொய்யலாற்று பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள மோளப்பாளையத்தில், தமிழ் பல்கலை நடத்திய அகழாய்வில், புதிய கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.தஞ்சாவூர் தமிழ் பல்கலையின், கடல்சார் தொல்லியல் மற்றும் பண்டைய வரலாற்று தொல்லியல் துறை தலைவர் பேராசிரியர் செல்வகுமார் கூறியதாவது:கோவை மாவட்டம், பூலுவாம்பட்டி மோளப்பாளையத்தில், 2021ல் நடந்த அகழாய்வில், புதிய கற்கால கருவிகளுடன், அக்கால மக்களின் வாழ்விட பகுதியையும் கண்டறிந்தோம். நடுத்தர வயது பெண், 3 - 7 வயதுடைய குழந்தைகள், உள்ளிட்ட, மூன்று மனித எலும்புக்கூடுகள், ஆடு, மாடு, சில காட்டு விலங்கின் எலும்புகள், கடல் கிளிஞ்சல், அம்மி கற்கள், அரவை கற்கள், கல் உருண்டைகள், தானிய விதைகள், கற்கோடரிகள். புதிய கற்கால பானைகள், கடல் சங்கில் செய்யப்பட்ட மணிகள், தானிய சேமிப்பு குழிகள் உள்ளிட்டவற்றை கண்டுபிடித்தோம். வெண்சங்கு, உருளை சங்கு மணிகள், நன்னீர் சிப்பியில் செய்யப்பட்ட கலைநயம் மிக்க மீன் வடிவ பதக்கம், கருகிப்போன கொள்ளு, உளுந்து, பச்சைப்பயறு, அவரை விதைகள், இலந்தை கொட்டை உள்ளிட்டவையும் கிடைத்தன. இங்கு கிடைத்த கரித்துண்டை, அமெரிக்காவில் உள்ள பீட்டா ஆய்வகத்துக்கு அனுப்பி காலக்கணிப்பு செய்ததில், அவை, 3,200லிருந்து 3,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்தியவை என்பது உறுதியானது. இந்தாண்டும் அங்குள்ள சோளக்கொல்லை அருகில், ஜூனில் அகழாய்வை துவக்கினோம். இதில், தரையில் இருந்து 80 முதல் 140 செ.மீ., ஆழத்தில் புதிய கற்கால மனிதர்களின் தொல்லியல் எச்சங்கள் கிடைத்துள்ளன. இங்கு பல இடங்களில் குழிகள் உள்ளன. அவை தானியக்கிடங்காகவும், வேறு பயன்பாட்டுக்காகவும் வெட்டப்பட்டிருக்கலாம்.கருகிய விதைகள், எலும்புகள், பானை ஓடுகள், மூன்று மெருகேற்றப்பட்ட கற்கோடரிகள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. மனிதனை புதைக்கும் ஈமச்சின்னம், பானை ஓடுகள், சுடுமண் பொருட்கள், மெருகேற்றிய கருப்பு - சிவப்பு பானை வகைகள், சுடுமண் கட்டிகள், குவார்ட்ஸ் கற்களால் செய்யப்பட்ட பிளேடுகள், பிறைச்சந்திரன் வடிவ நுண்கருவிகள் உள்ளிட்டவையும் கண்டெடுக்கப்பட்டன.இந்த பகுதி, நொய்யல் ஆற்றில் இருந்து தொலைவிலும், மலைகள் சூழ்ந்தும் உள்ளது. அதனால், 3,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்கள், மேற்கு தொடர்ச்சி மலையின் சாரல் மழை, நொய்யல் நீர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி விவசாயம் செய்தும், மலையை அரணாக வைத்து ஆடு, மாடுகளை வளர்த்தும், வளமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்ந்துள்ளனர்.கடல்சார் பொருட்களையும் நுகரும் வகையில், இவர்கள் மற்ற மக்களுடன் தொடர்பில் இருந்ததை, இங்கு கிடைத்துள்ள சங்கு பொருட்களால் அறிய முடிகிறது. இந்தாண்டு அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள், காலக்கணிப்புக்கு இனி அனுப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை