சென்னை:பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்தது தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, நான்கு பேருக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது.பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள, 'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக ரகசிய கூட்டம் நடத்தி, ஆள் சேர்த்தது தொடர்பாக, சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த டாக்டர் ஹமீது உசேன், அவரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் ஆகியோர், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். அவர்கள் இரு தினங்களுக்கு முன், சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களில், 10 இடங்களில், டாக்டர் ஹமீது உசேன் கூட்டாளிகளின் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், சாலியமங்கலத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், 26 உட்பட இருவரை கைது செய்தனர்.சோதனையின் போது, ஈரோடை சேர்ந்த முகமது ஈசாக், 45, வீட்டில், பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்தது தொடர்பான பென் டிரைவ், மெமரி கார்டு உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்கள் சிக்கின. அதேபோல, ஈரோடு செட்டிபாளையம் அசோக் நகரில் வசிக்கும் சர்புதீன், 40, புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பகுதியில் வசித்து வரும் அப்துல்காதர்,40 பண்ணை வீட்டிலும், தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரையைச் சேர்ந்த ஷேக் அலாவுதீன், 68, வீட்டிலும் ஆவணங்கள் சிக்கி உள்ளன. இது தொடர்பாக, நால்வரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, என்.ஐ.ஏ., அதிகாரிகள், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.