உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மொபைல் எண் வாயிலாக ரூ.3 லட்சம் நுாதன மோசடி வாங்காத கடனுக்கு வங்கியில் இருந்து நோட்டீஸ்

மொபைல் எண் வாயிலாக ரூ.3 லட்சம் நுாதன மோசடி வாங்காத கடனுக்கு வங்கியில் இருந்து நோட்டீஸ்

சென்னை:புதிதாக வாங்கிய மொபைல் போன் எண் வாயிலாக, ஆள் மாறாட்டம் செய்து, 3 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 43, சென்னை கிழக்கு மண்டல 'சைபர் கிரைம்' போலீசில் அளித்த புகார்:மயிலாப்பூர் எச்.டி.எப்.சி., வங்கியில், 2006ல் சம்பள கணக்கு துவக்கினேன். 2009ல் பணி மாறுதல் காரணமாக அமெரிக்கா சென்று விட்டேன். வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருந்த என் மொபைல் போன் எண்ணை எனக்கு தெரியாமல், 2021 ஜூலையில் வேறு ஒருவர் புதிதாக வாங்கியுள்ளார்.பின், என் வங்கி கணக்கில் 3 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றுள்ளார். புதிதாக, 'டெபிட் கார்டு' என்ற சேமிப்பு அட்டை வாங்கி, வங்கி கணக்கில் இருந்த தொகையையும் எடுத்துள்ளார். இந்நிலையில், நான் வாங்காத கடனிற்கு, என் நிரந்தர முகவரியான சேலத்தில் உள்ள வீட்டிற்கு வங்கி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.என்னை போல ஆள்மாறாட்டம் செய்து, மோசடியில் ஈடுபட்டவரை கைது செய்ய வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்தது.இப்புகாரின் அடிப்படையில், சென்னை கிழக்கு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்தனர். விசாரணையில் இந்த நுாதன மோசடியில் ஈடுபட்டது, செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ்கமல், 37, என தெரியவந்தது. அவரை நேற்று கைது செய்த போலீசார், அவரிடமிருந்து மொபைல் போனை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

நடந்தது எப்படி: அதிகாரி விளக்கம்

மொபைல் போன் எண் வாயிலாக நடந்த, இந்த நுாதன மோசடி குறித்து, விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் குமாரி கூறியதாவது:புகார்தாரர் வெளிநாடு சென்று விட்டதால், அவரது மயிலாப்பூர் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருந்த மொபைல் எண் உபயோகப்படுத்தப்படவில்லை. அந்த எண் செயலிழந்ததை அடுத்து, சில நாட்கள் கழித்து அதே எண்ணை ராஜ்கமல் வாங்கி உள்ளார்.ராஜ்கமலுக்கு ஆம்பூரில் உள்ள எச்.டி.எப்.சி., வங்கியில் கணக்கு உள்ளது. அங்கு கடன் பெற விண்ணப்பித்துள்ளார். அது, நிலுவையில் இருந்த நிலையில், செந்தில்குமார் கணக்கு வைத்துள்ள மயிலாப்பூர் வங்கி கிளையில் இருந்து ராஜ்கமலின் புதிய மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டு உள்ளனர். மொபைல் போன் வாயிலாக விசாரித்த போது, 'நான் செந்தில்குமார் தான்' என, ராஜ்கமல் தவறான தகவல் கூறி, உடனடியாக, 3 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். ஏ.டி.எம்., அட்டையையும் புதிதாக வாங்கி அப்பணத்தை செலவு செய்துள்ளார். 'சிபில் ஸ்கோர்' என்ற வங்கி கடன் தகுதி மதிப்பீடு அறிவதற்காக, சிபில் ஸ்கோர் சம்பந்தமான இணைய பக்கத்தில் செந்தில்குமார் சமீபத்தில் பார்த்தார். அப்போது தான், தனக்கு தெரியாமல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்தது தெரியவந்துள்ளது,இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

P.Sekaran
ஆக 21, 2024 17:06

இது முழுவதும் வங்கியின் குறைபாடே காரணம் ஆகும். வங்கிதான் முழு பொறுப்பும் எடுத்துக்கொள்ள வேண்டும்.


N Annamalai
ஆக 18, 2024 08:52

ரேசெர்வே வங்கி பெரிய அளவில் கட்டுப்பாடுகள் சட்டம் இயற்ற வேண்டும் .மக்களுக்கு னைத்து வங்கிகளும் காவல் துறையும் சேர்ந்து விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் .


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை