| ADDED : மே 16, 2024 09:48 PM
மே 17, 1880விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ள வீடூரில், 1880ல் இதே நாளில் பிறந்தவர் சக்கரவர்த்தி நயினார். சென்னை கிறிஸ்துவ கல்லுாரியில் தத்துவவியல், கல்வியியல் படிப்புகளை முடித்து தங்கப்பதக்கத்துடன் தேர்ச்சி பெற்றார். தத்துவம், சமயம், இலக்கிய துறைகளுடன் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருத மொழிகளிலும் புலமையுடன் இருந்தார். சென்னை மாநிலக் கல்லுாரி, குடந்தை அரசு கல்லுாரி, ராஜமுந்திரி அரசு கல்லுாரி ஆகியவற்றில் தத்துவ துறை பேராசிரியராகவும், ராஜமுந்திரி, குடந்தை கல்லுாரிகளில் முதல்வராகவும் இருந்தார். இவர், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். சமண பாடம் கற்க, இவரது வீட்டுக்கே திரு.வி.க., வந்தார். குடந்தை மக்கள் மன்றத்தை துவக்கி, பொது தொண்டிலும் ஈடுபட்டார். டென்னிஸ் விளையாட்டில் ஆர்வமுள்ள இவரின் சேவைகளை பிரிட்டிஷ் அரசு பாராட்டி, 'ஐ.இ.எஸ்., ராவ் பகதுார்' போன்ற பட்டங்களை வழங்கி கவுரவித்தது. இவர் 1960, பிப்ரவரி 12ல் தன் 80வது வயதில் மறைந்தார். தமிழின் சமண - சைவ ஆய்வு நுாலாசிரியர் பிறந்த தினம் இன்று!