| ADDED : ஜூன் 15, 2024 09:33 PM
ஜூன் 16, 1893சிவகங்கை மாவட்டம், ஆத்திக்காடு தெக்கூரில், முத்துக்கருப்பன் செட்டியார் -- வினைதீர்த்தாள் தம்பதியின் மகனாக, 1893ல் இதே நாளில் பிறந்தவர் கருமுத்து.தியாகராஜன். இவர், இலங்கை, கொழும்பில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லுாரியில் படித்தார். 'மார்னிங் ஸ்டார்' என்ற ஆங்கில இதழின் ஆசிரியராக பணியாற்றினார். அங்கு, தோட்ட தொழிலாளர்களுக்கு அடையாள சூடு போடுவதை எழுதி தடுத்தார். தமிழகம் திரும்பி, குஜராத்தை சேர்ந்த ராம்ஜி என்பவருடன் இணைந்து, மதுரையில் மீனாட்சி ஆலை என்ற ஜவுளி ஆலையை துவக்கினார்.தொடர்ந்து தன் மனைவி பெயரில், 'ஸ்ரீ விசாலாட்சி கலாசாலை' உயர்நிலைப் பள்ளி, பல்தொழில் பயிற்சி கல்லுாரிகளை மதுரையிலும், சேலத்திலும் துவக்கினார்.மதுரையில் தியாகராஜர் கலை, பொறியியல் கல்லுாரிகளை துவக்கினார். காங்கிரசில் சேர்ந்து, தொழிலாளர் தலைவர், மாகாண கமிட்டி செயலரானார். மதுரைக்கு காந்தி வந்த போது இவரது வீட்டில் தங்கினார். ஹிந்தி திணிப்பின்போது, காங்கிரசில் இருந்து விலகி, தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டார். சைவ பற்றாளராகவும் தொண்டாற்றியவர், தன் 81வது வயதில், 1974, ஜூலை 29ல் காலமானார்.தமிழையும், தொழிலையும் வளர்த்த வள்ளல் பிறந்த தினம் இன்று!