எழும்பூர்: சென்னை, புதுப்பேட்டை, நாகப்பன் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத், 33. இவர், எழும்பூரில் உள்ள 'டிராவல்ஸ்' நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். தீவிர ரஜினி ரசிகரான கோபிநாத், தன் 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் ரஜினி பாடலுக்கு அவரை போலவே நடனமாடி பதிவிட்டு, அப்பகுதி வாசிகளிடையே பிரபலமானார்.இவர், நேற்று காலை 'நான் தற்கொலை செய்துக்கொள்ள போகிறேன்' என, மொபைல் போனில் 'வாட்ஸாப் - ஸ்டேட்டஸ்' வைத்துள்ளார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள், கோபிநாத்தின் மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயன்றனர்; அவர் போன் எடுக்கவில்லை.சந்தேகமடைந்து அவரது தந்தை மணிக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது. நண்பர்களும் அங்கு விரைந்தனர். கோபிநாத் தங்கியுள்ள அறைக்கு சென்று பார்த்தபோது, கோபிநாத் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.எழும்பூர் போலீசார் உடலை மீட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுப்பி போலீசார் விசாரித்தனர்.இதில், கோபிநாத் 'குயிக் கேஷ் ஆப்' எனும் 'ஆன்லைன்' கடன் செயலி வாயிலாக 50,000 ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதை திருப்பி செலுத்தியதாக தெரிகிறது. ஆனாலும், கடன் அளித்த நபர்கள் வட்டி கேட்டு, அடிக்கடி மிரட்டி வந்துள்ளனர். இந்த நிலையில், கோபிநாத்தின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு 'வாட்ஸாப்'பில் பகிர்ந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட அவமானம் தாங்க முடியாமல், தற்கொலை செய்தது தெரிந்தது.போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
பின்னணியில் சீனர்கள்
கடன் செயலிகள் பின்னணியில் சீனர்கள் உள்ளனர். அவர்களால் தான் மனித உயிர்கள் பலியாகி வருகின்றன. இது குறித்து மாநில சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:கடன் செயலிகளை சீனர்கள் உருவாக்கி, 'கூகுள் பிளே ஸ்டோரில்' பரப்புகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், பெங்களூரில் பதுங்கி இருந்த சீனாவைச் சேர்ந்த ஜியா யமாவ், 38, யுவான் லுான், 28, உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் தலைவனாக, சீனாவைச் சேர்ந்த ஹாங் என்பவர் செயல்பட்டான். சிங்கப்பூரில் பதுங்கி இருந்த அவன், கூட்டாளிகள் கைதான தகவல் அறிந்து தப்பிவிட்டான். கடன் செயலி வாயிலாக சுருட்டப்படும் பணம் சீனாவுக்கு செல்கிறது. இதன் பின்னணியில் மிகப்பெரிய 'நெட் ஒர்க்' உள்ளது. அதுபற்றி விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.