சென்னை:''கட்சி நிர்வாகிகள் அடிக்கடி கூட்டம் நடத்தி, மக்களுடன் நெருக்கமாக வேண்டும். அடுத்த தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கப்படும்,'' என, பழனிசாமி தெரிவித்துள்ளார்.லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவின. இதுவரை இல்லாத அளவுக்கு ஓட்டு சதவீதம் குறைந்தது. இதற்கான காரண்களை ஆராய்வதற்காக, தொகுதி வாரியான ஆலோசனைக் கூட்டம் நேற்று துவங்கியது. கூட்டத்திற்கு வந்த நிர்வாகிகளின் மொபைல் போன்களை, கட்சி அலுவலகப் பணியாளர்கள் வாங்கி வைத்துக் கொண்டு, அவர்களை கூட்ட அரங்கிற்குள் அனுமதித்தனர்.பொதுச்செயலர் பழனிசாமி, மாலை 4:00 மணிக்கு கட்சி அலுவலகம் வந்தார். அவர்களுக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். பின் கூட்ட அரங்கிற்கு சென்றார். முதலில் காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாலை, 4:30 மணிக்கு துவங்கிய கூட்டம், 6:30 மணிக்கு நிறைவடைந்தது. அதன்பின் ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நடந்தது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ஆறு சட்டசபை தொகுதிகளின் நிர்வாகிகள், தொகுதிவாரியாக தனித்தனியே அமர வைக்கப்பட்டனர். ஒவ்வொரு தொகுதியிலும், பேச விரும்பும் நிர்வாகிகள் பேசலாம் என, பொதுச்செயலர் தெரிவித்தார். பெரும்பாலானோர் கட்சி தலைமையை புகழ்ந்து பேசினர். சிலர் மட்டும், 'தற்போதைய கட்சி நிர்வாகிகள், பழைய நிர்வாகிகளை மதிப்பதில்லை. இதனால், அவர்கள் கட்சிப் பணியில் இருந்து ஒதுங்கி இருக்கின்றனர்' என்றனர்.சிலர், 'கூட்டணி பலமாக அமையவில்லை. தி.மு.க., தரப்பில் மகளிருக்கு, 1,000 ரூபாய் வழங்கியதை மையப்படுத்தி பிரசாரம் செய்தனர்' என்றனர். அதற்கு பதில் அளித்த பழனிசாமி, '1,000 ரூபாய் கொடுக்க சொன்னதே நாம்தான் என்பதை மக்களிடம் விளக்குங்கள். கட்சியில் மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு குழு அமைத்து செயல்படுங்கள்' என்றார்.ஒரு சிலர் முன்னாள் அமைச்சர் வளர்மதி மீது புகார் தெரிவிக்க, தனிப்பட்ட முறையில் புகார் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறப்பட்டது. இறுதியாக பழனிசாமி பேசினார். ஒன்றியம், நகரம், பேரூராட்சி அளவில், அடிக்கடி கூட்டம் நடத்துங்கள். மக்களுடன் அதிகம் தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் நெருங்கி பழகுங்கள். நம் ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறுங்கள். அடுத்த முறை பலமான கூட்டணி அமைக்க ஏற்பாடு செய்யப்படும். காஞ்சிபுரம் தொகுதியில் பெரிய அளவில் நம் ஓட்டு சதவீதம் குறையவில்லை. எனவே, இப்போதிருந்தே தேர்தல் பணிகளை துவக்கினால், சட்டசபை தேர்தலில் வெற்றி பெறலாம். இளைஞர்கள், இளம்பெண்களை கட்சிப் பணியில் அதிகம் ஈடுபடுத்துங்கள். தகவல் தொழில்நுட்ப அணியில் உள்ளவர்கள், சமூக வலைதளங்களில் வேகமாக செயல்படுங்கள். தோல்வியை மறந்து உழைப்போம். வரும் தேர்தலில் ஆட்சி அமைப்போம் எனப் பேசினார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய உறுப்பினர் அட்டை
கூட்டத்திற்கு வந்த மாவட்ட செயலர்களிடம், அந்தந்த மாவட்ட உறுப்பினர்களுக்கான, புதிய உறுப்பினர் அட்டைகளை, பொதுச்செயலர் பழனிசாமி நேற்று வழங்கினார். முதல் கூட்டத்தில், ஆறு மாவட்டங்களுக்கான உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.