வந்த வேகத்தில் வெளியேறிய பன்னீர்செல்வம்
அ.தி.மு.க.,வினரின் தொடர் கோரிக்கையை ஏற்று கடந்தாண்டு இறுதியில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திடம் இருந்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இதனால், சட்டசபை கூட்டத்திற்கு வருவதை அவர் தவிர்த்து வந்தார்.கடந்த ஜனவரி மாதம் நடந்த கவர்னர் உரை மற்றும் விவாதத்தில் அவர் பங்கேற்கவில்லை. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், அய்யப்பன், வைத்திலிங்கம் மட்டுமே சபைக்கு வந்தனர். இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்க, பன்னீர்செல்வம் நேற்று சபைக்கு வந்தார்.எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு பின்புறம் உள்ள இரண்டாவது இருக்கையில், அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. சபை துவங்கியதும், 9:31 மணிக்கு தன் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், அய்யப்பன் உடன் பன்னீர்செல்வம் சபைக்கு வந்து அமர்ந்தார்.உடல்நலக் குறைவால் வைத்திலிங்கம் பங்கேற்கவில்லை. அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்யும் வரை, அவர்கள் காத்திருந்தனர். பின், மனோஜ் பாண்டியன் எழுந்து வெளிநடப்பு செய்வதாக கூறினார். இதையடுத்து, மூன்று பேரும் சபையில் இருந்து காலை 9:36 மணிக்கு வெளியேறினர்.