உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமேஸ்வரம் கோயில் கட்டடக்கலை அதிசயத்தை பாதுகாக்க கொள்கை முடிவு: உயர்நீதிமன்றம் உத்தரவு

ராமேஸ்வரம் கோயில் கட்டடக்கலை அதிசயத்தை பாதுகாக்க கொள்கை முடிவு: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் கட்டடக்கலை அதிசயத்தை, குறிப்பாக உலகப் புகழ் பெற்ற மூன்றாம் பிரகாரத்தை பாதுகாக்க அங்குள்ள கடைகள் உட்பட அனைத்து வணிக நடவடிக்கைகளை அகற்றுவதற்கு அறநிலையத்துறை திட்டமிட்டுள்ள கொள்கை முடிவைப் பொறுத்தவரை, அவர்களின் முடிவிற்கே விடப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கடைகளுக்கு வாடகையை உயர்த்தி 2023 ல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து கடைக்காரர்கள், 'தங்களுக்கு நோட்டீஸ் அளிக்காமல் அறிவிப்பு வெளியிட்டது ஏற்புடையதல்ல. கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்' என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். தனிநீதிபதி: மனுதாரர்களை பொறுத்தவரை உண்மையான குத்தகைதாரர்கள் அல்ல. உள் குத்தகைதாரர்கள். வாடகையை உயர்த்திய உத்தரவிற்கு எதிராக வழக்கு தொடர அவர்களுக்கு முகாந்திரம் இல்லை. உலகின் புகழ் பெற்ற கட்டடக்கலை அதிசயங்களில் ஒன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மூன்றாம் பிரகாரம். அதில் இக்கடைகள் அமைந்துள்ளன. மூன்றாம் பிரகார கட்டடக்கலை அதிசயத்தை பாதுகாக்க கடைகளை காலி செய்ய அறநிலையத்துறை கொள்கை முடிவு எடுக்க விரும்பியது. கொள்கை முடிவு எடுத்தால், அதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு உத்தரவிட்டார். இதற்கு எதிராக கடைக்காரர்கள் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. கோயில் தரப்பு: வாடகை உயர்வு உத்தரவிற்கு எதிராக, யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அறநிலையத்துறை சட்டப்படி அத்துறையின் கமிஷனரிடம் மேல்முறையீடு செய்யலாம். அதை தவிர்த்து இங்கு தாக்கல் செய்யும் ரிட் மனுவை உயர்நீதிமன்றம் ஏற்க இயலாது. குத்தகைதாரர்களை மூன்றாம் பிரகாரத்தில் இருந்து வெளியேற்ற கொள்கை முடிவு எடுக்கப்பட உள்ளது. பெரும்பாலான குத்தகைதாரர்கள் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி நிலுவையில் உள்ளது. தொகையை வசூலிக்க வாடகையை உயர்த்துவது அல்லது அதிக வாடகையை நிர்ணயம் செய்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது. தொகையை வசூலிக்க குத்தகையை சிறிது காலத்திற்கு தொடரலாம். 44 மனுதாரர்களில் 40 மனுக்களை தனிநீதிபதி தள்ளுபடி செய்தார். நான்கு மனுக்களை அனுமதித்தார். அவர்கள் அசல் குத்தகைதாரர்கள். மற்றவர்கள் உள்குத்தகைதாரர்கள். இவ்வாறு தெரிவித்தது. நீதிபதிகள்: ராமநாதசுவாமி கோயிலின் கட்டடக்கலை அதிசயத்தை, குறிப்பாக உலகப் புகழ் பெற்ற மூன்றாம் பிரகாரத்தை பாதுகாக்க அதில் அமைந்துள்ள இக்கடைகள் போன்ற அனைத்து வணிக நடவடிக்கைகளையும் அகற்ற அறநிலையத்துறை திட்டமிட்டுள்ள கொள்கை முடிவைப் பொறுத்தவரை அவர்களின் முடிவிற்கே விடப்படுகிறது. கொள்கை முடிவு எடுக்கப்பட்டால், அதை அறநிலையத்துறை அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும். தற்போதுவரை கொள்கை முடிவு எடுக்கப்படவில்லை. வாடகையை உயர்த்துவது அல்லது நிர்ணயம் செய்வதில் மட்டுமே முடிவெடுக்கப்பட்டுள்ளது.தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. வாடகை நிர்ணய உத்தரவிற்கு எதிராக மனுதாரர்கள் அறநிலையத்துறை கமிஷனரிடம் மேல்முறையீடு செய்யலாம். அவர் முடிவெடுக்கும்வரை மனுதாரர்கள் தற்போதைய வாடகையை கோயில் நிர்வாகத்திற்கு செலுத்த அனுமதிக்கப்படுகின்றனர். இந்த அனுமதி, மனுதாரர்கள் குத்தகை கோருவதற்கான உரிமையை வழங்காது. கோயில் அலுவலர்கள் அதிக வாடகையை கோருவதற்கான உரிமையை தடுக்காது. பிரச்னை முழுவதற்கும் மேல்முறையீட்டின் அடிப்படையில் மட்டுமே தீர்வு காண வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ