மின் நுகர்வு புதிய உச்சம் 42.64 கோடி யூனிட்டாக உயர்வு
சென்னை: தமிழகத்தில், வீடு, கடைகள் உட்பட அனைத்து பிரிவுகளுக்கும், மின் வினியோகம் செய்யும் பணியை, அரசு நிறுவனமான மின் வாரியம் மட்டுமே மேற்கொண்டு உள்ளது.ஒரு நாள் முழுதும் அதாவது, 24 மணி நேரமும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு மின் நுகர்வு எனப்படுகிறது. தினமும் காலை, மாலையில் மின் நுகர்வு அதிகமாக இருக்கும்; பகல் நேரங்களில் குறைவாக இருக்கும். தமிழகத்தில் தினமும் சராசரியாக, 30 கோடி யூனிட்களாக உள்ள மின் நுகர்வு, கோடை காலத்தில் அதிகரிக்கிறது.அதன்படி, 2023 ஏப்., 20ல் மின் நுகர்வு, 42.37 கோடி யூனிட்களாக அதிகரித்தது. இதுவே, நேற்று முன்தினம் வரை உச்ச அளவாக இருந்தது.இம்மாதம் கோடை காலம் துவங்கியதால், வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், வீடுகளில், 'ஏசி' பயன்பாடு அதிகரித்துள்ளது. மின்சார வாகனம் அதிகரிப்பு, ஐ.பி.எல்., கிரிக்கெட் உள்ளிட்ட காரணங்களாலும் மின் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மின் நுகர்வு நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில், 42.64 கோடி யூனிட்களாக அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியது.