சென்னை : விழுப்புரம் மாவட்டம் ரெட்டிகுப்பத்தை சேர்ந்தவர் கோபிநாத், 34. இவரது மனைவி பொன்னரிசி, 29. இவர்களுக்கு, 7 வயதில் பெண் குழந்தையும், 4 வயதில் ஆண் குழந்தையும் இருந்தனர். வரதட்சணை கேட்டு, கோபிநாத் மற்றும் அவரது உறவினர்கள் பொன்னரசியை தாக்கி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.கடந்த மார்ச்சில் பொன்னரசி தற்கொலை செய்து கொண்டார். அவரது குழந்தைகள் இருவரும் உயிரிழந்தனர். கைது
தன் மகள் மற்றும் பேரக்குழந்தைகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி, பொன்னரசியின் தந்தை அரிகிருஷ்ணன் அளித்த புகாரின்படி, விக்கிரவாண்டி போலீசார், கோபிநாத்தை கைது செய்தனர். கடலுார் மத்திய சிறையில், தற்போது கோபிநாத் உள்ளார்.இந்நிலையில், தன் தந்தை இறந்து விட்டதால், இறுதி சடங்கில் பங்கேற்க இடைக்கால ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் கோபிநாத் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி கே.குமரேஷ் பாபு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோபிநாத் சார்பாக வழக்கறிஞர் என்.மகேந்திர பாபு ஆஜராகி, ''மனைவியை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில், மனுதாரர் மார்ச் முதல் கடலுார் மத்திய சிறையில் உள்ளார். அவரின் ஜாமின் மனு இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.''மனுதாரரின் தந்தை நாகராஜன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், மே 4ல் இறந்து விட்டார். அவரின் இறுதி சடங்கில் பங்கேற்க, மே 5 முதல் மே 7 வரை, மனுதாரருக்கு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும்,'' என்றார்.நிபந்தனை
போலீசார் சார்பில் அரசு கூடுதல் வழக்கறிஞர் எஸ்.ராஜாகுமார் ஆஜராகி, ''கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, மனுதாரர் கோரிய இடைக்கால ஜாமின் வழங்குவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை,'' என்றார்.இதையடுத்து, 'மே 5 முதல் மே 7 வரை, தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க, கடும் நிபந்தனைகளுடன், கைதி கோபிநாத்துக்கு மூன்று நாள் இடைக்கால ஜாமின் வழங்கிய நீதிபதி, நாளை காலை 10:00 மணிக்கு மீண்டும் சரணடைய வேண்டும்' என, உத்தரவிட்டார்.