பதவி உயர்ந்தும் சம்பளம் உயரவில்லை பேராசிரியர்கள் கொதிப்பு 3,000 கல்லுாரி பேராசிரியர்கள் கொதிப்பு
மதுரை:பதவி உயர்வு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளாகியும், இதுவரை அதற்கான சம்பள உயர்வை வழங்காமல் தமிழக அரசு இழுத்தடித்து வருவதாக 3,000க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் கல்லுாரி பேராசிரியர்கள் கொதிப்பில் உள்ளனர்.தமிழகத்தில், 130க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 15,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அரசு, உதவி பெறும் கல்லுாரி பேராசிரியர்களுக்கு, அவர்கள் பணிக்காலம் அடிப்படையில், இணை பேராசிரியர், பேராசிரியர் பதவி உயர்வு அளிக்க, 2021ல் அ.தி.மு.க., ஆட்சியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதை அரசு கல்லுாரிகளில் செயல்படுத்தி, பதவி உயர்வு, சம்பள உயர்வு வழங்கப்பட்ட நிலையில், அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் செயல்படுத்தவில்லை. இது குறித்து பல்வேறு போராட்டங்களுக்கு பின், உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான உத்தரவு மட்டும் பிறப்பிக்கப்பட்டது. இதுவரை அதற்கான சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. குறிப்பாக, 2007க்கு பின் பணியில் சேர்ந்த பலர் சம்பள உயர்வின்றி பணியாற்றுகின்றனர். இதை கண்டித்து, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடத்த பேராசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, இன்று மறியல் நடத்தப்பட உள்ளதாக, பேராசிரியர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.