கைலாசநாதர் கோவிலில் லலிதா பரமேஸ்வரியாக நிற்கிறார் ராஜசிம்ம பல்லவன் ஸ்தபதி தட்சிணாமூர்த்தி தகவல்
சென்னை:''காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில், லலிதா பரமேஸ்வரி சிற்பமாக, அக்கோவிலை கட்டிய ராஜசிம்ம பல்லவனே நிற்கிறார்,'' என, ஸ்தபதி தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.ஸ்தபதி தட்சிணாமூர்த்தி எழுதிய, 'தி டூயல் போர்ட்ரைட் - பீச்சரிங் ராஜசிம்ம பல்லவா' என்ற நுாலை, மத்திய தொல்லி யல் துறை, சென்னை வட்டார கண்காணிப்பாளர்காளிமுத்து வெளியிட, மத்திய தொல்லியல் துறையின் கேரள மாநில முன்னாள் இயக்குநர் சத்யமூர்த்தி பெற்றுக் கொண்டார். புதிய அணுகுமுறை
நுாலை வெளியிட்டு காளிமுத்து பேசுகையில், ''மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில், பாதுகாக்கப்பட்ட, வழிபாட்டில் உள்ள கோவிலான காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் உள்ள ஒரு சிற்பத்தை, ஒரு சிற்பியின் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து, இந்த நுாலை எழுதியுள்ள, நுாலாசிரியரை வாழ்த்துகிறேன்,'' என்றார்.நுாலை பெற்றுக்கொண்ட சத்தியமூர்த்தி பேசுகையில்,''நாம், தமிழை முத்தமிழ் என்கிறோம். நுாலாசிரியர் இயல், இசை, நாடகத்துடன், சிற்பம், கட்டடக் கலைகளையும் உள்ளடக்கிய, ஐந்தமிழ் என்கிறார். நாங்கள், தொல்லியல் துறையில் பணியாக நினைத்து எதையும் செய்ததில்லை.குடும்ப விசேஷத்தில் பங்கேற்பது போலவே, அகழாய்வு, ஆலய பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளிலும், அனைவரும் ஈடுபட்டோம். இந்த நுால், பல்லவர்களின் சிற்பக்கலையை சிலாகிக்கிறது,'' என்றார்.தமிழக தொல்லியல் துறை, முன்னாள் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதரன் பேசுகையில், ''ராஜராஜ சோழன் தான் கட்டிய தஞ்சை கோவிலை, தான் எழுப்பித்த திருக்கற்றளி என்றும், கைலாசநாதர் கோவிலை, பெரிய திருக்கற்றளி என்றும் குறிப்பிடுகிறார்.''அப்படிப்பட்ட கோவிலை கட்டிய ராஜசிம்ம பல்லவனுக்கு, 200 பட்டப்பெயர்கள் உண்டு. அவற்றை குறிப்பிட்டுள்ள நுாலாசிரியர், அவரையே சிற்பத்தில் பொருத்தி, அதற்கான காரணங்களை அடுக்குவது, புதிய அணுகுமுறை,'' என்றார். சிற்ப சாஸ்திரம்
நுாலாசிரியரான ஸ்தபதி தட்சிணாமூர்த்தி பேசியதாவது:பல்லவ மன்னரான ராஜசிம்மன், 1,300 ஆண்டுகளுக்கு முன், மாமல்லபுரம் கடற்கரை கோவில், பனமலை தாளகிரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் உள்ளிட்டவற்றை கட்டியுள்ளார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பானவை. காஞ்சிபுரம் கோவிலில் உள்ள தட்சி ணாமூர்த்தி சிற்பத்தை ஆய்வு செய்து, நுால் எழுத திட்டமிட்டேன். அனைவரும் காணும்படியாக வடிவமைக்கப்பட்ட, தட்சி ணாமூர்த்தியின் திருவடியை கண்டு பிரமித்தேன். வேறு எங்கும் அப்படிப்பட்ட சிற்பம் இல்லை.தமிழ் இலக்கணத்தில், இரட்டுற மொழிதல் என்பது போல், சிற்ப வடிவமைப்பிலும் சிலேடை உண்டு. அதாவது, ஒன்றை வெளிப்படுத்துவது போல், இன்னொன்றை வெளிப்படுத்துவது. தமிழ் இலக்கியத்துக்கு உள்ள அனைத்து இலக்கணங்களும், சிற்பத்துக்கும் பொருந்தும். ராஜசிம்மன் சிற்ப சாஸ்திரம் அறிந்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்றுத்தான், தண்டி எனும் புலவர், 'காவியதர்ஷனம்' என்ற நுாலை எழுதினார். ராஜசிம்மனுக்கு, 'லலிதா விலாசம்'என்ற பட்ட பெயரும் உண்டு. அதாவது, அம்மனை, தன் மனதுள் வைத்த பக்தன் என்பதே அதன் பொருள். அதை, சைலாசநாதர் கோவிலின், மகேந்திரேஸ்வரம் என்ற இரண்டாம் நுழைவாயிலின் இடப்பக்கம் உள்ள சிற்பத்தால் உணர்ந்தேன். அதாவது, சிம்மவாகினியான லலிதாம்பிகையின் உருவத்தில், ராஜசிம்ம பல்லவனே இருப்பதை அறிந்தேன். மேலுலக அடையாளம்
அதில், அம்மனுக்கான குடை, மேலுலகத்தில் இருந்து வந்ததற்கு அடையாளமாக, மிதக்கும் வகையிலும், மன்னணின் வெண்கொற்றக்குடை, தரையிலிருந்து விரிந்ததாகவும் காட்டப்பட்டுள்ளது.அம்மனின் சக்கராயுதம், ஒரு கரத்தில் காட்டப்பட்ட நிலையில், இன்னொரு கரத்தில், மன்னனின் தர்மச்சக்கரம் காட்டப்பட்டுள்ளது. இப்படி, பல விஷயங்கள் அம்மனுக்கும், மன்னனுக்குமானதை பொருத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற சிற்பம் வேறெங்கும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், தமிழக தொல்லியல் துறை முன்னாள் கண்காணிப்பாளர் வசந்தி, முன்னாள் பேராசிரியர் திருமூர்த்தி, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.