பதவிகளை துறந்த பண்பாளர்
மு ன்பெல்லாம் பணக்காரர்களை குறிப்பிடுவதற்கு அடையாளமாக, 'நீ என்ன பூண்டி வாண்டையாரா இல்லை தஞ்சை மூப்பனாரா...' என்று மக்கள் கேட்பர். அந்த அளவிற்கு பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர், கோவிந்தசாமி கருப்பையா மூப்பனார் என்ற ஜி.கே.மூப்பனார்.இன்று அவரின் 23வது நினைவு தினம்.விவசாய குடும்பத்தில் பிறந்த மூப்பனார், காங்கிரஸ் கட்சியில் பணிபுரிய விரும்பி, காமராஜரை சந்தித்து, தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். பார்ப்பதற்கு இனிமை, பழகுவதில் எளிமை என, எந்த நேரத்திலும் புன்கையுடன் இருப்பார். யாரிடமும் கடும்சொல் கூறாதவர்.கதராடை, ரப்பர் செருப்பு, கையில் கடிகாரம். இது தான் மூப்பனாரின் எளிமையான தோற்றம். பெருந்தலைவர் காமராஜர், தன்னைத் தேடி வந்த பிரதமர் பதவியை எவ்வாறு ஏற்க மறுத்தாரோ, அதேபோல் 1996ல், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பிரதமராக வாய்ப்பு வந்தும் மறுத்தவர்; அன்று தேவகவுடா பிரதமராவதற்கு, பெரும் பங்காற்றினார். காங்கிரசில் பல பதவிகளை வகித்து கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் நேரு, இந்திரா, ராஜிவ், நரசிம்மராவ் என அனைத்து பிரதமர்களிடமும் நெருக்கமாக நட்பு கொண்டிருந்தார்.அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராக இருந்து, பல மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்களிடம் ஏற்பட்ட கோபதாபங்களை நீக்கி, ஒற்றுமைப்படுத்தி காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்தவர்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக, 1976 முதல் 1980 வரை திறம்பட பணியாற்றினார். பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்னை ஏற்பட்டபோது, நேரடி பார்வையாளர்களாக சுமுக தீர்வு கண்டவர்.தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு தலைவரின் பெயரை வைத்து அரசு பஸ்கள் ஓடியபோது, தென் மாவட்டத்தில் ஜாதிமோதல்கள் நடந்தன. தமிழகத்தில் உள்ள எந்த கட்சி தலைவரும் பொதுமக்களை சந்திக்க அஞ்சிய போது, மூப்பனார் தனியாக சென்று, மக்களின் கருத்துகளை கேட்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம், 'ஜாதி தலைவர்களின் பெயர்களை போக்குவரத்து கழகத்திற்கு வைப்பதாலேயே ஜாதி மோதல்கள் வருகின்றன. 'எனவே அதை நீக்கிவிட்டு தமிழகம் முழுவதும் பேருந்துகளுக்கு, 'தமிழக அரசு போக்குவரத்து கழகம்' என்று பெயர் வைக்கலாம்' என்று ஆலோசனை கூறி செயல்படுத்தி காண்பித்தார் மூப்பனார்.கடந்த 1996 லோக்சபா தேர்தலுக்கு, ஆடம்பரத் திருமணம் நடத்திய அ.தி.மு.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி நிலைப்பாடு எடுத்தபோது, கட்சியிலிருந்து பிரிந்து, 20 நாட்களில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார்.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து, 20 எம்.பி.,க்கள் மற்றும் 30 எம்.எல்.ஏ.,க்களை சைக்கிள் சின்னத்தில் போட்டியிட வைத்து, வெற்றி பெற வைத்தார்.இசை மேதை தியாகராஜருக்கு விழா எடுக்கத் துவங்கியவர் மூப்பனாரே!கடந்த 1991 லோக்சபா தேர்தலுக்காக, தமிழகம் ஸ்ரீபெரும்புதுாரில் பிரசாரத்திற்கு வந்திருந்த காங்., தலைவர் ராஜிவை, விடுதலைப் புலிகள் கொன்றபோது, மூப்பனார் அவரைத் தேடி ஓடி, அவர் உடலைப் பார்த்து, 'என் தலைவரே இறந்து விட்டார்.அவர் மீது பட்ட குண்டுகள், என் மீதும் படட்டும்... எனக்கு உயிர் பயமில்லை' என்று கதறி அழுத சம்பவம், அனைவரின் நெஞ்சையும் உலுக்கியது.இப்போது உள்ள காங்கிரசாருக்கு அந்த தியாகம் புரியாது. 19.08.1931ல் தஞ்சையில் பிறந்த மூப்பனார். 30.08.2001ல் உடல்நலக் குறைவால், சென்னையில் காலமானார்.ஜி.கே. மூப்பனார் புகழ் என்றும் நிலைத்து இருக்கும்!- ஏ.எஸ்.பி.சிவசுந்தரம், மதுரை.