| ADDED : ஜூலை 31, 2024 10:27 PM
பொள்ளாச்சி:தமிழகத்தில், நடமாடும் கால்நடை மருந்தக பிரிவு திட்டத்தில், வாகனங்கள் இயக்கப்படும் வழித்தடம் தயாரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தமிழகத்தில், கால்நடைத் துறை சார்பில் நடமாடும் கால்நடை மருந்தக பிரிவு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக, மாவட்டந்தோறும், 1 லட்சம் கால்நடைகளுக்கு ஒரு நடமாடும் கால்நடை மருந்தக வாகனம் வீதம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.ஒவ்வொரு வாகனத்திலும், பெரிய மற்றும் சிறிய விலங்குகளுக்கான அறுவை சிகிச்சை பெட்டிகள், பயோமெடிக்கல் கழிவு சேகரிப்பு தொட்டிகள், எல்.இ.டி., பிளட் லைட்கள், பவர் ஜெனரேட்டர் மற்றும் செயற்கை கருவூட்டல் கருவிகள் என, பல்வேறு வசதிகளை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.தற்போது, மாவட்டந்தோறும், இந்த வாகனங்கள் சென்று திரும்பும் வழித்தடம் குறித்த விபரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கால்நடை மருத்துவமனைகள் இல்லாத கிராமங்கள் மற்றும் கால்நடை மருத்துவமனையில் இருந்து தொலைதுாரங்களில் உள்ள கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, வழித்தடம் தயாரிக்கப்படுகிறது.கால்நடைத்துறையினர் கூறுகையில் 'நடமாடும் கால்நடை மருத்துவ பிரிவில் பணிபுரியும் டாக்டர்களை, அரசே தீர்மானிக்கும். தற்போது, அந்த வாகனங்கள் சென்று திரும்பும் கிராமங்கள் குறித்த விபரம், உட்கோட்ட அளவில் தயாரிக்கப்பட்டு, மண்டல அலுவலகம் வாயிலாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும்' என்றனர்.