சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் நேற்று நடந்த லோக் அதாலத்தில், 126 வழக்குகளில், 18.14 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.தமிழகத்தில் நடப்பாண்டுக்கான, 2வது தேசிய லோக் அதாலத், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் நேற்று நடந்தது. நீதிபதிகள் டி.பரதசக்ரவர்த்தி, சுந்தர் மோகன், குமரேஷ் பாபு, பாலாஜி, கோவிந்தராஜன் திலகவதி, லட்சுமிநாராயணன், தனபால், செந்தில்குமார் ஆகியோர் தலைமையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு அமர்வுகளும். நீதிபதிகள் விக்டோரியா கவுரி, ராஜசேகர், அருள் முருகன், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் தலைமையில், மதுரை கிளையில், நான்கு அமர்வுகளும் ஏற்படுத்தப்பட்டன.விபத்து இழப்பீடு, வருவாய் வழக்குகள், மின்சாரம், குடிநீர் கட்டண பிரச்னைகள் மற்றும் நிலம் கையகப்படுத்தல் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தில், 99 வழக்குகளில், 15.79 கோடி ரூபாய்க்கும், மதுரை கிளையில், 27 வழக்குகளில், 2.34 கோடி ரூபாய்க்கும் தீர்வு காணப்பட்டது.லோக் அதாலத்துக்கான ஏற்பாடுகளை, உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவர் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், டீக்காராமன், சதீஷ்குமார், ஆதிகேசவலு, சரவணன், மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலரான நீதிபதி நஷிர் அகமது, உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலரான நீதிபதி கே.சுதா ஆகியோர் செய்திருந்தனர்.சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் நடந்த லோக் அதாலத்தில் பங்கேற்ற, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதிகள் சுந்தர், லட்சுமி நாரயணன் ஆகியோர் இழப்பீட்டு தொகை 2.75 கோடி ரூபாய்க்கான உத்தரவுகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அதேநேரத்தில், மாநிலம் முழுதும் நேற்று நடந்த லோக் அதாலத்தில் பட்டியலிடப்பட்ட மொத்தம் 64,142 வழக்குகளில், 334.54 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.