சென்னை: கோடைகாலத்தில் குல்பி, ஐஸ்கிரீம், நெய் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், போதிய ஒப்பந்த வாகனங்கள் இல்லாததால், அவற்றின் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.கடும் வெப்பம் காரணமாக, ஆவின் மோர், தயிர், லஸ்லி, ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்டவற்றின் தேவை அதிகரித்து உள்ளது. ஆனால், தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாததால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆவின் பாலகங்களுக்கு பொருட்களை வினியோகிக்க, ஆன்லைன் வாயிலாக வசதி செய்யப்பட்டு உள்ளது. முதல் நாள் மாலை 6:00 மணிக்குள் பொருட்களை முன்பதிவு செய்தால், அடுத்த நாள் பகல் 2:00 மணிக்குள், ஒப்பந்த வாகனங்கள் வாயிலாக பொருட்கள் சப்ளை செய்யப்படும்.கடந்த ஒரு வாரமாக, விற்பனை நிலையங்களுக்கு தேவையான பொருட்கள் அனுப்பப்படுவது இல்லை; முன்பதிவு செய்ததில், 50 சதவீத பொருட்கள் மட்டுமே அனுப்பப்படுகின்றன. பொருட்கள் உற்பத்தி குறைவு மட்டுமின்றி, ஒப்பந்த வாகனங்கள் பற்றாக்குறையும் இதற்கு காரணமாகும்.ஒவ்வொரு கடைக்கும் வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே, ஒப்பந்த வாகனங்கள் செல்லும் வகையில் வழித்தடம் உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த வழித்தடத்தில் ஒரே நாளில் கூடுதல் பொருட்களை ஏற்ற வேண்டிய சூழல் வந்தால், பல விற்பனை நிலையங்களுக்கு பொருட்கள் சப்ளை நிறுத்தப்படுகிறது. இதனால், மாலை வரை பொருட்கள் வரும் என காத்திருந்து, விற்பனை நிலையங்களை நடத்துவோர் ஏமாந்து போகின்றனர்.கோடைக்கு இதமாக, மோர், தயிர், லஸ்ஸி, குல்பி, ஐஸ்கிரீம் சுவைக்க வரும் நுகர்வோரும், அவை கிடைக்காமல் அதிருப்தி அடைகின்றனர். பொருட்கள் அனுப்பாதது குறித்து கேட்டால், விற்பனை பிரிவு அதிகாரிகள் உரிய பதில் அளிப்பது இல்லை. ஆனால், பொருட்கள் விற்பனை முறையாக நடப்பதாக, மண்டல அதிகாரிகள், துறை செயலர் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குனர் உள்ளிட்டோருக்கு, தவறான தகவல்களை அனுப்பி ஏமாற்றி வருகின்றனர்.நாள்தோறும், ஆன்லைனில் பதிவு; வினியோக விபரங்களை ஆராய்ந்தால் உண்மை நிலவரம் தெரியும். அந்த பட்டியலையும், உயர் அதிகாரிகளுக்கு கொடுப்பதில்லை. இப்பிரச்னையில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.