உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் கோடை உணவு முறைகள்

வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் கோடை உணவு முறைகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:சென்னை மற்றும் புறநகரில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நகர்ப்புற மக்களின் தேடல், வெப்பத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதாகவே உள்ளது.இந்நிலையில், கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, தேசிய சித்த மருத்துவ நிறுவனம், எளிய பாரம்பரிய முறைகள் குறித்து தெளிவுபடுத்தி உள்ளது.

புதினா, மல்லி டீ

புதினா, கொத்தமல்லி போன்றவற்றை தனித்தனியே, முறையாக தேநீர் செய்து பருகினால் உடல் வெப்பம் தணிவதோடு, சிறந்த நோய் தடுப்பு காரணியாகவும் செயல்படும். மந்தத்தை போக்கி, பசியையும் துாண்டும்.

இளநீர், கற்றாழை ஜூஸ்

இளநீர், கற்றாழை கோடைக்கால பாதிப்பான உடல் உஷ்ணம், வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆகியவற்றை போக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.இவற்றில் உள்ள விட்டமின்கள், தாது உப்புகள் உடலுக்குத் தேவையான அளவில் இருப்பதால், உடலின் நீரிழப்பை தடுப்பதோடு, மனதிற்கும் உற்சாகத்தை தருகின்றன. நுங்குடன், இளநீர் சேர்த்து பருகினால், உடலின் சூடு குறைந்து குளிர்ச்சி உண்டாகும்.

பானகம்

எலுமிச்சை பழச்சாறுடன் தேவையான அளவு நீர் சேர்த்து, சிறிதளவு புளி, சுக்கு, ஏலக்காய், பனை வெல்லம் சேர்த்து அருந்த, கோடைக்காலத்தில் உண்டாகும் அதிக தாகம் குறையும். மேலும், உப்புச் சத்துக்களை சமன்படுத்தி, நீரிழப்பை தடுக்கும்.

பழைய சோறு

வடித்த சோற்றில், இரவில் நீர் ஊற்றி வைத்து, மறுநாள் காலை அதனுடன் சிறிது மோர், சின்ன வெங்காயம் சேர்த்து உண்பதே, நம் முன்னோர்கள் காட்டிய சிறந்த வழி.இதில், குடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளதால், செரிமானத்தை சீர் செய்வதோடு, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. உடலின் ரத்த அழுத்தத்தையும் சீரான நிலையில் வைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

கஞ்சி

கோடைக்காலத்தில், பசித்தன்மை குறைந்து காணப்படும். அதனால், இந்த காலகட்டத்தில், சிறியவர் முதல் முதியவர் வரை உண்ணத் தகுந்த உணவு கஞ்சிதான்.இது, குடலில் எளிதில் உறிஞ்சப்பட்டு, விரைவில் செரிக்கும் தன்மையும், நீரிழப்பை தடுக்கும் தன்மையும் கொண்டது. அத்துடன் இது, உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு.நவரை அரிசியுடன் தேவையான அளவு நீர் சேர்த்து வேக வைத்து, சிறிதளவு பால் மற்றும் பனை வெல்லம் சேர்த்து அருந்தலாம். பச்சைப்பயிறு, கோதுமை, கொள்ளு, கருப்பு உளுந்து, கடலை பருப்பு, துவரம் பருப்பு, அரிசி, எள், மொச்சை சம அளவு எடுத்து பொடி செய்து, நீரிலிட்டு வேக வைத்து, சிறிதளவு பால் மற்றும் பனை வெல்லம் சேர்ந்து கஞ்சியாக அருந்தலாம்.

கூழ்

குடலுக்கு நன்மை பயக்கும் நுண்கிருமிகளை நன்னிலைப்படுத்தி குடற்புண், கழிச்சல், செரிமான பிரச்னை போன்ற உபாதைகள் உண்டாகாமல் கூழ் தடுக்கிறது. கம்பங்கூழ், கோடைக்காலத்தில் உண்டாகும் வேர்க்குரு, சிரங்கு போன்றவற்றை சரி செய்வதோடு, உடலின் வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியடையச் செய்கிறது.

கீரைகள்

கீரைகளில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால், எளிதில் மலத்தை வெளியேற்றுகின்றன.விட்டமின், கால்சியம், பொட்டாசியம் போன்ற உப்புச்சத்து மிகுந்து காணப்படுவதால், வாய் முதல் ஆசனவாய் வரை உள்ள செரிமான உறுப்புகளில் ஏற்படும் கோளாறுகளான வாய்ப்புண், குடற்புண், செரியாமை, மலக்கட்டு, மூலம், ஆசனவாய் வெடிப்பு ஆகியவை ஏற்படாமல் தடுத்து, உஷ்ணத்தை குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.மணத்தக்காளி கீரையுடன் சிறு பருப்பு, சின்ன வெங்காயம், மிளகு சேர்த்து வேக வைத்து, நெய் சேர்த்து தாளித்து கூட்டாக செய்து சாப்பிடலாம். பருப்புக்கீரை, முளைக்கீரை, பசலைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணிக்கீரை ஆகியவற்றையும் கூட்டாக செய்து சாப்பிடலாம்.

பழங்கள்

தர்பூசணி பழத்தில், 90 சதவீத நீர்ச்சத்தும், விட்டமின் 'ஏ' மற்றும் 'சி' நிறைந்திருப்பதால், உடலின் நீர் அளவு குறையாமல் தடுப்பதோடு, குடல் சீராக இயங்க உதவுகிறது.ரத்த அழுத்தத்தை சீர் செய்து, சிறுநீர் கற்கள் உண்டாகாமல் தடுக்கிறது. சூரிய வெப்பத்தால் தோல் சேதப்படாமல் பாதுகாக்கிறது. முலாம்பழம், சாத்துக்குடி, வெள்ளரிப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சைப்பழம், தர்பூசணி ஆகியவை கோடைக்காலத்திற்கு உரிய பழங்கள்.இப்பழங்களை பழமா கவோ, பழரசமாகவோ அருந்த, உடலில் நீரின் அளவு சமன்படுவதோடு, பெருங்குடல் சீராக இயங்கும். முலாம் பழத்தால் அதிக தாகம் தணியும்; நீரெரிச்சல் நீங்கும். வெள்ளரிப் பழத்தால் உடல் வெப்பம் குறையும்; நாவறட்சி நீங்கும்.எலுமிச்சை பழத்தால் வெப்பத்தால் உடலில் அதிகரித்த பித்தம் தணியும்.

நீர் மோர்

கோடைக்காலத்திற்கான இதமான பானம் நீர் மோர். மோரில், நீர் மற்றும் உப்பு சத்து நிறைந்துள்ளதால், அதிக தாகத்தை போக்கி உடல் வறட்சியை தடுப்பதோடு, வெப்பத்தால் உண்டாகும் நீர்க்கடுப்பு, நீரெரிச்சல் போன்ற சிறுநீர் நோய்களை போக்குகிறது.குடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் இதில் நிறைந்துள்ளதால், செரிமானத்தை சீர் செய்து, குடலை பலப்படுத்துகிறது. வயிற்று வலி, வயிற்றுப்புண் ஆகியவற்றை குணப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

காய்கறிகள்

வெள்ளைப் பூசணியில் அதிக அளவு நீர்ச்சத்து இருப்பதோடு, வைட்டமின் பி, சி, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற தாது உப்புகள் மிகுந்துள்ளதால், இதை கூட்டாகவோ, பழரசமாகவோ செய்து பருகினால், உடலின் வெப்பம் குறைந்து, நீரிழப்பு தடுக்கப்படுகிறது. நீர்க்கட்டு, நீர்க்கடுப்பு போன்ற சிறுநீர் கோளாறுகளும் சீராகும்.பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலையும் வெள்ளைப் பூசணி குணமாக்குகிறது. வெள்ளரிப்பிஞ்சை மிளகு மற்றும் மோருடன் சேர்த்து பச்சடியாக செய்து சாப்பிட்டால், உடலின் உஷ்ணத்தை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சுரைக்காயை கூட்டு செய்து சாப்பிட்டால், ரத்த அழுத்தம் சீராவதோடு, இதயத்திற்கும் நல்ல பலம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை