2 நாளில் சரியாகி விடும் என ஒரே பதில் தரும் அதிகாரிகள் சம்பளம் கிடைக்காமல் துாய்மை பாரத திட்ட ஊழியர்கள் அவதி
சென்னை:துாய்மை பாரத இயக்க திட்டத்தில் பணியாற்றும், வட்டார மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு, இரண்டு மாதமாக ஊதியம் வழங்கப்படாததால் தவித்து வருகின்றனர்.இத்திட்டத்தில் மாநிலம் முழுதும், 66,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அவர்களை கண்காணிக்கும் வகையில், 385 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், 37 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா, நான்கு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், 37 கணினி உதவியாளர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர். 40 சதவீதம் நிதி
இவர்கள், சுகாதார பணிகளை மேற்பார்வையிடுவது; பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில், கழிவறைகள் பராமரிக்கப்படுகின்றனவா என கண்காணிப்பது; வீடு தோறும் கழிப்பிடம் அவசியம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, துாய்மை காவலர்கள் பணியை கண்காணிப்பது போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.துாய்மை பாரத இயக்க திட்டத்திற்கு, மத்திய அரசு, 60 சதவீதம், மாநில அரசு, 40 சதவீதம் நிதி வழங்குகின்றன.இதில், துாய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு, முறையாக சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், வட்டார மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு, சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது.வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:துாய்மை பாரத திட்டத்திற்கு, மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியில், ஒரு சதவீதம் நிர்வாக கணக்கிற்கு ஒதுக்கப்பட்டு, எங்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, சொற்ப ஊதியத்தில் பணியாற்றி வருகிறோம். ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து, ஊரக வளர்ச்சித்துறை கமிஷனரிடம், கடந்த மாதம் மனு அளித்துள்ளோம். அதிகாரிகளிடம் சம்பளம் குறித்து கேட்டால், இரண்டு நாட்களில் வந்து விடும் எனப் பதில் அளிக்கின்றனர். ஆனால், இரண்டு மாதமாக சம்பளம் வரவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர். பிரத்யேக வங்கி கணக்கு
ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:இத்திட்டத்தின் நிதியை, சில மாநிலங்கள் முறைகேடு செய்தன. அதனால், மத்திய அரசு இந்த திட்ட நிதிக்காக பிரத்யேக வங்கி கணக்கை துவக்கி உள்ளது. அதிலிருந்து மாநில அரசுகளுக்கு எவ்வளவு நிதி வழங்கப்படுகிறது; அதன் செயல்பாடு ஆகியவை கண்காணிக்கப்படும். இப்பிரச்னை நாடு முழுதும் உள்ளது. ஓரிரு நாட்களில் இப்பிரச்னை முடிவுக்கு வந்து விடும். அதன்பிறகு இரண்டு மாத சம்பளம், அவர்களுக்கு சேர்த்து வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.