சென்னை: 'குரூப் - 4' தேர்வில், தமிழ் மற்றும் கணித வினாக்கள் எளிதாக இருந்ததால், 'கட் ஆப்' மதிப்பெண் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு துறைகளில், கிராம நிர்வாக அலுவலர் என்ற வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட பல்வேறு பதவிகளில், 6,244 காலியிடங்களை நிரப்ப, குரூப் 4 தேர்வு, அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், நேற்று காலை, 9:30 முதல், 12:30 மணி வரை நடந்தது. 19 லட்சம் பேர்
மாநிலம் முழுதும், 7,247 மையங்களில், 20.37 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டது. இதில், 19 லட்சம் பேர் வரை தேர்வில் பங்கேற்றதாக தெரியவந்துள்ளது. இந்த தேர்வில் மொத்தம் 200 கேள்விகளுக்கு, 300 மதிப்பெண் என்ற முறையில், சரியான விடையை தேர்வு செய்யும் வினாத்தாள் இடம் பெற்றது. 'கட் ஆப்' அதிகரிக்கும்
தமிழில், 100 கேள்விகள்; பொது அறிவுப் பகுதி, 75 மற்றும் கணிதம், சிந்தனை திறனை சோதிக்கும் முறையில், 25 கேள்விகள் இடம் பெற்றன. நேற்றைய வினாத்தாளை பொறுத்தவரை, தமிழும், கணிதமும் எளிதாக இருந்ததாக, பயிற்சியாளர்களும், தேர்வர்களும் தெரிவித்தனர். ஆசியாவிலேயே மிகப்பழமையான நுாலகம் எது; தாதாசாகேப் பால்கே விருது துவங்கப்பட்ட ஆண்டு; காந்தியடிகள் தமிழகத்துக்கு வரும் போது, அவரது உரையை மொழி பெயர்த்து கூறியவர் யார் என்பது போன்ற கேள்விகள், தமிழில் இடம் பெற்றன.பொது அறிவு பிரிவில், நகராட்சியின் முதன்மை நிர்வாக அலுவலர் யார்; செம்மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்ட ஆண்டு; தேவதாசி ஒழிப்பு முறையை கொண்டு வர, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு ஆணிவேராக இருந்த பெண் சீர்திருத்தவாதி, சமக்ர சிக் ஷா அபியான் திட்டத்தின் நோக்கம்; நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற புத்தகம் எழுதியவர்; கட்சி தாவல் தடை சட்டம் குறித்த சரியான கூற்று; தமிழக அரசின் கல்வி வளர்ச்சி நாள் போன்ற கேள்விகள் இடம் பெற்றன.இந்த தேர்வில், பொது படிப்பில் சில சிக்கலான கேள்விகளும், குழப்பமான விடைகளை கொண்ட கேள்விகளும் இடம் பெற்றன. ஆனாலும், தமிழ் மற்றும் கணிதம் எளிதாக இருந்ததால், கவுன்சிலிங்குக்கான கட் ஆப் மதிப்பெண் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.