உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேரள முதல்வரிடம் தமிழகம் ரூ.5 கோடி நிதி

கேரள முதல்வரிடம் தமிழகம் ரூ.5 கோடி நிதி

சென்னை:கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால், பல பகுதிகள் உருக்குலைந்துள்ளன. நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு செல்லும் பிரதான சாலைகளும், பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவுவதற்காக, தமிழக அரசு சார்பில், 5 கோடி வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதை நேரில் வழங்குவதற்காக, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு, பொதுப்பணித் துறை சிறப்பு அதிகாரி விஸ்வநாத் உள்ளிட்டோர், நேற்று காலை திருவனந்தபுரம் சென்றனர்.அவர்களை வரவேற்ற கேரள அதிகாரிகள், தலைமைச் செயலகம் அழைத்துச் சென்றனர். காலையில், தலைமை செயலகம் வந்து பணிகளை கவனித்துவிட்டு, 11:00 மணிக்கு தன் வீட்டுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்று விட்டார். தமிழக அமைச்சர் வந்திருக்கும் தகவல் கிடைத்ததும், மீண்டும் பிற்பகல் 3:00 மணிக்கு அவர் தலைமைச் செயலகம் வந்தார். அவரிடம் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட 5 கோடி ரூபாய்க்கான காசோலையை, அமைச்சர் வழங்கினார். அங்கிருந்து வயநாடு சென்று பாதிப்புகளை பார்வையிட இருப்பதாகவும், அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தமிழக முதல்வர் தயாராக இருப்பதாகவும், கேரள முதல்வரிடம் அமைச்சர் வேலு கூறியுள்ளார். அப்போது கேரள முதல்வருடன் இருந்த அம்மாநில அதிகாரிகள், 'தமிழக அரசின் ஒத்துழைப்புக்கு நன்றி. ஆனால், வயநாட்டில் நிலைமை மோசமாக உள்ளது. 'மழையும் தொடர்கிறது. தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள பேரிடர் மீட்பு குழுவினரால் கூட, இன்னும் பாதிக்கப்பட்ட இடத்தை அடைய முடியவில்லை.வயநாடு செல்லும் வாகனங்களும் விபத்துக்கு உள்ளாகின்றன. இப்போது செல்வது சரியாக இருக்காது' என கூறியுள்ளனர்.இதையடுத்து அமைச்சர்வேலு தலைமையிலான தமிழக அதிகாரிகள், நேற்று இரவு சென்னை திரும்பினர்.

அ.தி.மு.க., - காங்., தலா ரூ.1 கோடி

அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அறிக்கை:கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட பேரிடர் மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக, அ.தி.மு.க., சார்பில், 1 கோடி ரூபாய் நிதி மற்றும் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:கேரளத்தின் வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய நீலகிரி மாவட்ட காங்கிரஸ் தலைவரும், ஊட்டி எம்.எல்.ஏ.,வுமான கணேஷ் ஏற்பாட்டில், காங்கிரஸ் நிர்வாகிகள் 80 பேர் கொண்ட மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் சார்பில், 1 கோடி ரூபாயை கேரள முதல்வரிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் வழங்குவார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை