காற்றாலையுடன் கூடிய சூரியசக்தி மின் நிலையம் கோவை, துாத்துக்குடியில் அமைக்கிறது வாரியம்
சென்னை:துாத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பழைய காற்றாலைகளை அகற்றிவிட்டு, தலா 50 மெகா வாட் திறனில், காற்றாலையுடன் கூடிய சூரியசக்தி மின் நிலையங்களை, பசுமை எரிசக்தி நிறுவனம் அமைக்க உள்ளது.துாத்துக்குடி மாவட்டத்தில் முள்ளக்காடு, கயத்தாறு; மதுரை புலியங்குளம்; கன்னியாகுமரி முப்பந்தல்; கோவை சுல்தான்பேட்டை; திருப்பூர் கேதானுார் மின் வாரியத்திற்கு, 17 மெகா வாட் திறனில் 110 காற்றாலைகள் உள்ளன. இவை, 1986 - 1993ல் அமைக்கப்பட்டவை.எனவே, பழைய காற்றாலைகளை அகற்றிவிட்டு அந்த இடத்தில், 'ஹைபிரிட்' முறையில், 41 மெகா வாட் திறனில் காற்றாலையும், 40 மெகா வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையமும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தேசிய காற்று சக்தி நிறுவனத்திடம் ஆய்வு செய்து தருமாறு, மின் வாரியம் வலியுறுத்தியது. தற்போது அந்நிறுவனம், இரு வகை மின் நிலையங்களையும் ஒரே இடத்தில் அமைக்கலாம் என்று தெரிவித்து உள்ளது.தமிழகத்தில் கடந்த ஜூன் நிலவரப்படி, 10,790 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் உள்ளன. ஒரு காற்றாலை ஆயுள் காலம் 20 - 25 ஆண்டுகள். பழைய காற்றாலைக்கு பதில் புதிதாக அமைக்கவும், திறனை அதிகரிக்கவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தி ஆயுளை நீட்டிக்கவும், காற்றாலை மின் திட்ட மறுசீரமைப்பு மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை - 2024ஐ தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது.அதன் அடிப்படையில், மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிக்தி நிறுவனம், பழைய காற்றாலை உள்ள இடத்தில் அவற்றை அகற்றிவிட்டு, அங்கு தலா 50 மெகா வாட் திறனில் காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் நிலையம் அமைக்கும் பணியை துவக்க உள்ளது. பகலில் சூரியசக்தி மின்சாரமும், இரவில் காற்றாலை மின்சாரமும் கிடைக்கும்.