உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மெத்தனால் வாங்கி தந்தவர் கைது

மெத்தனால் வாங்கி தந்தவர் கைது

கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் வாங்கித் தந்த, சென்னையை சேர்ந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில், கள்ளச்சாராயம் குடித்து, 56 பேர் பலியாகி உள்ளனர். இது தொடர்பாக, கருணாபுரத்தை சேர்ந்த கள்ளச்சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ் உட்பட, 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில், விழுப்புரத்தை சேர்ந்த மாதேஷ் அளித்த வாக்குமூலத்தில், 'சென்னை மதுரவாயலை சேர்ந்த சிவகுமார் தான், தனியார் நிறுவனத்திடம் இருந்து மெத்தனால் வாங்கிக் கொடுத்தார்' என்று கூறினார். இதையடுத்து, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரும், கள்ளச்சாராய பலிகள் குறித்து விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி., போலீசாரும், சிவகுமாரை, 33, தேடி வந்தனர். வீட்டில் அவர் இல்லாததால் மாறு வேடத்தில் கண்காணித்து வந்தனர். இதற்கிடையில், சென்னை எம்.ஜி.ஆர்., நகர் சூளைப்பள்ளத்தில் உள்ள சகோதரி ஆதிலட்சுமியின் வீட்டில், சிவகுமார் பதுங்கி உள்ளார் என்ற தகவல், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சென்னை வடக்கு மண்டல டி.எஸ்.பி., கந்தசாமிக்கு கிடைத்தது.இதையடுத்து, அவரும், இன்ஸ்பெக்டர் அன்பரசி உள்ளிட்டோரும் நேற்று அதிகாலை, 4:25 மணியளவில், ஆதிலட்சுமியின் வீட்டை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். திடீரென வீட்டிற்குள் புகுந்து சோதனை செய்தனர். அங்கு துாங்கிக் கொண்டிருந்த சிவகுமாரை பிடித்து விசாரித்தனர். அப்போது, 'சென்னை புழல் வடபெரும்பாக்கம் பகுதியில் உள்ள, தனியார் ரசாயன தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறேன். நான் தான் கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு, மெத்தனால் வாங்கிக் கொடுத்தேன்' என்று கூறியுள்ளார். இதையடுத்து, சிவக்குமாரை கைது செய்து, சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சிவகுமாரை கள்ளக்குறிச்சி அழைத்துச் சென்றனர். 'சிவகுமார் யாருக்கெல்லாம் மெத்தனால் வாங்கிக் கொடுத்தார்; வாக்குமூலத்தில் என்ன கூறினார்' என்ற விபரங்களை கேட்ட போது, 'அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது' என்று, டி.எஸ்.பி., கந்தசாமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ