| ADDED : ஜூன் 30, 2024 09:06 AM
கூடலுார் : கோவை மாவட்டம், மருதமலை வனப்பகுதியில், உடல் நலம் பாதிக்கப்பட்ட, 40 வயது பெண் யானைக்கு, கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அதனுடன் இருந்த நான்கு மாத ஆண் குட்டி யானை வேறொரு யானையுடன் சென்று விட்டது. சிகிச்சைக்கு பின் குணமடைந்த பெண் யானையை, வனப்பகுதியில் விடுவித்தனர். தாயை பிரிந்து சென்ற குட்டி யானை, வனப்பகுதியில் தனியாக இருப்பதை பார்த்த வன ஊழியர்கள், அதை மீட்டு தாயிடம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தாய், அதை ஏற்றுக் கொள்ளவில்லை. கடந்த, 9ம் தேதி குட்டி யானை பராமரிப்புக்காக முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டது. பாகன் உட்பட இரண்டு ஊழியர்கள் தனியாக நியமித்து அதை, 24 மணி நேரமும் கண்காணித்து பராமரித்து வந்தனர். நேற்று முன்தினம், உடல் நலம் பாதிக்கப்பட்டது. கால்நடை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.