உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாடு முழுவதும் இன்று நடக்கிறது... நீட் தேர்வு தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பேர்

நாடு முழுவதும் இன்று நடக்கிறது... நீட் தேர்வு தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பேர்

சென்னை: இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான 'நீட்' நுழைவு தேர்வு, நாடு முழுவதும் இன்று நடைபெற உள்ளது. தமிழகத்தில் 1.50 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு என்ற நீட் தேர்வு வாயிலாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.அதேபோல, ராணுவக் கல்லுாரிகளில் பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வை, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. அதன்படி, 2024 - 25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் நாடு முழுவதும், 557 நகரங்களில் இன்று நடக்கிறது.இந்த தேர்வை, தமிழகத்தில் 1.50 லட்சம் மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுத உள்ளனர். பிற்பகல் 2:00 முதல் 5:20 மணி வரை நீட் தேர்வு நடைபெறுகிறது.இதற்காக சென்னை உட்பட பல்வேறு நகரங்களில், தேர்வு மையங்களை தயார் செய்யும் பணி நேற்று நடந்தது. தேர்வு முடிவு ஜூன் 14ம் தேதி வெளியிடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்ட அறிவுரை:நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவ - மாணவியர், 'ஹால் டிக்கெட்'டில் தெரிவித்துள்ள நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். போக்குவரத்து நெரிசல் மற்றும் வானிலை மாற்றங்கள் போன்றவை கருதி, தேர்வர்கள் முன்கூட்டியே தேர்வு மையங்களுக்கு செல்லும் வகையில் திட்டமிடுவது அவசியம்.தேர்வு மையங்களுக்கு பிற்பகல் 1:30 மணிக்கு முன் வருகை தர வேண்டும். அதன்பின் வரும் மாணவர்கள் மையங்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஹால் டிக்கெட் மற்றும் அடையாளச் சான்று இல்லாத மாணவர்களுக்கு தேர்வு மையங்களுக்குள் அனுமதி கிடையாது. தேர்வர்கள், 'மெட்டல் டிடெக்டர்' வாயிலாக சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் என்னென்ன?

தேர்வு மையங்களுக்குள் பேப்பர், துண்டு சீட்டுகள், பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பவுச், கால்குலேட்டர், ஸ்கேல், எலக்ட்ரானிக் பேனா, லாக் அட்டவணை, கையில் அணியும் ஹெல்த் பேன்ட், தோள் பை, பிரேஸ்லெட், மொபைல் போன், மைக்ரோபோன், புளூடூத், இயர்போன், பெல்ட், பர்ஸ், வாட்ச், ஆபரணங்கள், உணவு பொருட்கள் மற்றும் தண்ணீர்பாட்டில்கள் கொண்டு செல்ல முடியாது. மாணவர்கள் எளிதில் தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில்களை கொண்டு செல்லலாம். தேர்வு துவங்கி, முதல் ஒரு மணி நேரம் மற்றும் கடைசி அரை மணி நேரம் மாணவர்கள் கழிப்பறை செல்ல அனுமதி கிடையாது. பாரம்பரிய மற்றும் கலாசார, மதம் சார்ந்த ஆடை அணிந்து வருவோர், சோதனைக்கு வசதியாக பகல் 12:30 மணிக்கே தேர்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும்.

குற்றவியல் நடவடிக்கை!

மாணவர்கள் சாதாரண செருப்பு, குறைந்த உயரம் உள்ள காலணிகள் அணிந்து வர அனுமதி உண்டு; 'ஷூ' அணிந்து வரக்கூடாது. தேர்வு முடியும் முன், விடைத்தாளை ஒப்படைத்து விட்டு வெளியே வரக்கூடாது.தேர்வு அறையில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிக்க, தேசிய தேர்வுகள் முகமை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்கள், அடுத்த மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும். மேலும், குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

மதிப்பெண் எப்படி?

நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்களில் தலா 50 கேள்விகள் என, 200 கேள்விகள் கேட்கப்படும்.அவற்றில், 180 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என, மொத்தம் 720 மதிப்பெண் வழங்கப்படுகிறது. தவறான பதிலுக்கு 1 மதிப்பெண், 'நெகட்டிவ்' என்ற அடிப்படையில் குறைக்கப்படும்.தமிழகத்தில் தேர்வு எழுதியோர் எண்ணிக்கைஆண்டுகள் - தேர்வு எழுதியோர் - தேர்ச்சி பெற்றோர்2021 - 1.10 லட்சம் பேர் - 58,922 பேர்2022 - 1.32 லட்சம் பேர் - 67,787 பேர்2023 - 1.47 லட்சம் பேர் - 78,693 பேர்2024 - 1.50 லட்சம் பேர் இன்று எழுதுபவர்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை