இது களையெடுப்பு அல்ல; கட்டுமான சீரமைப்பு அடுத்தடுத்த மாற்றங்களுக்கு தயாராகும் ஸ்டாலின்
சென்னை:'கட்சியின் நலன் கருதி மாற்றம் தொடரும். இது களையெடுப்பு அல்ல; கட்டுமான சீரமைப்பு' என, முதல்வர் ஸ்டாலின் கடிதம் கூறியுள்ளார்.கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:தமிழகம் அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற லட்சிய நோக்கத்துடன், தி.மு.க., அரசு செயலாற்றி வரும் நிலையில், தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில், மத்திய பா.ஜ., அரசு நமக்குரிய நிதியை வழங்காமல் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது.தி.மு.க.வுக்கு நல்வாய்ப்பு அமைகிறதென்றால், அதை கெடுப்பதற்கான சதிகளைச் செய்யும் அரசியல் சக்திகள், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முகமூடியுடன் வெளியே வரும். தமிழக மக்களுக்கு எதிரான, தமிழகத்திற்கு எந்த பயனுமில்லாத, கள்ளக்கூட்டணி வைத்திருக்கிற, காசு வாங்கிக் கொண்டு கூவுகிற அந்த முகமூடிகளைக் கிழித்தெறிந்து, தி.மு.க., அணியின் வெற்றியை உறுதி செய்வோம்.அந்த வெற்றியை அடைவதற்கான நிர்வாக வசதிக்காகத்தான், மாவட்டக் நிர்வாகத்தில் மாற்றங்கள் துவங்கியுள்ளன. சட்டசபை தேர்தலுக்கு ஓர் ஆண்டு காலமே இடையில் உள்ளதால், அதற்கேற்ப களப் பணிகள் அமைய வேண்டும் என்பதற்காகவே, இந்த மாற்றங்களும் அதற்கேற்ற நியமனங்களும் செய்யப்பட்டுள்ளன. இதேபோல இன்னும் சில அறிவிப்புகளையும் தொண்டர்கள் எதிர்பார்க்கக்கூடும். கட்சியின் நலன் கருதி, இத்தகைய முடிவுகள் தொடரும். 200 தொகுதிகள் இலக்கு என நிர்ணயிக்கப்பட்டு உள்ளதால், வெற்றிப் பாதையில் பயணிப்பதற்காக, இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது களையெடுப்பு அல்ல; கட்டுமானச் சீரமைப்பு. தி.மு.க., எனும் 75 ஆண்டு கால கட்சியின் உறுதிமிக்க கட்டுமானம் மேலும் வலிவுடனும் பொலிவுடனும் திகழ்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு நடவடிக்கை. அறிவாலயம், அடித்தளத்தில் இன்றளவும் வலிமையாகத் திகழ்கிறது. அதுதான், நம் எதிரிகளின் கண்களை உறுத்துகிறது. அறிவாலயத்தின் ஒரு துகளை கூட எவராலும் அசைக்க முடியாது.வரும் சட்டசபை தேர்தலிலும், தி.மு.க., கூட்டணி வெற்றி முத்திரை பதிப்பதை தடுக்க முடியாது என்பது, அரசியல் எதிரிகளுக்கும் நன்றாக தெரியும். கள்ள கூட்டணி, திரைமறைவு கூட்டணி, ஓட்டுகளை சிதறடிக்க நினைக்கும் கூட்டணி என, நம்மை எதிர்ப்பவர்கள் எத்தனை, 'கெட்டப்' போட்டு வந்தாலும் களம் நமதே.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.***