சென்னை:தமிழகத்தில், 1980 முதல் பல்வேறு கால கட்டங்களில், நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதில், நகரங்களில் ஏழை மக்கள் வசித்து வந்த இடங்களில், அவர்களுக்கு வீடு கட்ட நிலங்கள் ஒதுக்கப்பட்டன. இதற்காக ஒதுக்கீட்டாளர்களிடம் தவணை முறையில் பணம் வசூலித்து, அவர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்க, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் திட்டமிட்டது. பெரும்பாலான மக்கள் தவணை செலுத்தினாலும், விற்பனை பத்திரம் கிடைக்காத சூழல் உள்ளது. அதற்கு காரணம், இத்திட்டங்களில் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம், பல்வேறு துறைகளுக்கு சொந்தமானதாக உள்ளது. இதற்காக, அந்தந்த துறைகளிடம் இருந்து, முறையாக நில உரிமை மாற்றம் நடக்க வேண்டும். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, நில உரிமை மாற்றம் நடக்காமல் உள்ளது. இந்நிலையில், 2018ல் இப்பணிகளுக்காக அதிகாரமிக்க உயர்நிலை குழு அமைக்கப்பட்டது. அதில், அனைத்து துறை உயரதிகாரிகளும் இடம் பெற்றனர். தலைமை செயலர் தலைமையிலான இந்தக் குழு, பல்வேறு கட்டங்களாக கூட்டம் நடத்தி, நில உரிமை மாற்றத்திற்கான நடவடிக்கை எடுத்துள்ளது.இதுகுறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதில், 294 இடங்களுக்கு மட்டுமே, நில உரிமை மாற்றம் பெற வேண்டி இருந்தது. தலைமை செயலர் தலைமையிலான உயர்நிலை குழு பிறப்பித்த உத்தரவுகள் வாயிலாக, இதுவரை, 116 திட்ட பகுதிகளுக்கு நில உரிமை மாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. இதில், 178 திட்டப் பகுதிகளுக்கு நில உரிமை மாற்ற உத்தரவுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஒப்புதல் பெறுவதில் ஏற்பட்ட பிரச்னையே இதற்கு காரணம். இப்பிரச்னைக்கு தீர்வு காண, உயர்நிலைக்குழு விரைவில் கூட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.