காரில் 28 கிலோ தங்கம் கடத்தலா? வணிகவரி அதிகாரிகள் விசாரணை!
சென்னை: பெங்களூருவில் இருந்து, சென்னைக்கு காரில் எடுத்து வரப்பட்ட, 20 கோடி ரூபாய் மதிப்பிலான, 28 கிலோ தங்க நகைகள் கடத்தி வரப்பட்டதா என, வணிக வரித்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.சென்னை அண்ணா சதுக்கம் போலீசார், மெரினா கடற்கரை காமராஜர் சாலை உழைப்பாளர் சிலை அருகே, நேற்று முன் தினம் மாலை, 7:00 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகம்
அப்போது, அடையாறில் இருந்து பாரிமுனை நோக்கிச் சென்ற கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 28 கிலோ தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 20 கோடி ரூபாய். காரில் வந்த நான்கு பேரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.அப்போது, அவர்கள் கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த நகைக் கடை மேலாளர்கள் பிரகாஷ்,27; கிரண்,27, சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த நகைக் கடை மேலாளர் அனில்,45, பெருங்குடியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பால், 31 என்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் தங்க நகைக்கான ஆவணங்களை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால், ஆவணங்களின் உண்மைத் தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், நகைகளுடன் நான்கு பேரையும், வணிக வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள், இது கடத்தல் தங்கமா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். 5 மணி நேரம்
ஏற்கனவே, சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ., ஸன்னி லாய்ட் உடன் சேர்ந்து, திருவல்லிக் கேணி காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ., ராஜா சிங், 20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் கூட்டு சேர்ந்து வழிப்பறி செய்த, வருமான வரித்துறை மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகளும் கைதாகி உள்ளனர்.இந்நிலையில், தங்க நகைகளுடன் சிக்கிய நபர்களிடம், அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணையை துரிதமாக முடித்து, ஐந்து மணி நேரத்திற்குள், வணிக வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து உள்ளனர்.