கோவை : கேரளாவில் வெஸ்ட் நைல் எனும் புதுவித காய்ச்சல் பரவி வருகிறது. இக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு, உயிருக்கு ஆபத்தான நரம்பியல் நோய்கள் ஏற்படலாம் என்றும், நோய் தீவிரமடையும் வரை, அறிகுறிகள் பொதுவாக வெளியே தெரியாது.'மனிதர்களில் இந்தத் தொற்று பெரும்பாலும் பாதிக்கப்பட்ட கொசுக்கள் கடிப்பதனால் ஏற்படுகிறது' என்றும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில், 'வெஸ்ட் நைல்' காய்ச்சலால், 47 வயது நபர் உயிரிழந்துள்ளார். டெங்கு, சிக்குன் குனியாவை போன்று கொசுக்கள் வாயிலாக பாதிக்கப்பட்டவரிடம் இருந்து பிறருக்கு பரவும் தன்மை கொண்டது.கேரளாவுக்கு மிக அருகில் உள்ள, கோவைக்கும் பாதிப்பு பரவும் அபாயம் உள்ளது. எல்லை கிராமங்களில் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நடமாடும் மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.சுகாதார துறை மாவட்ட துணை இயக்குனர் அருணா கூறுகையில், “நமக்கு இப்பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவே. இருப்பினும், தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக எல்லையோர கிராமங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. வெஸ்ட் நைல் காய்ச்சலை பொறுத்தவரை, 80 சதவீதம் அறிகுறிகள் தெரிவதில்லை.''இதனால், அதுபோன்று காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்களை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்,” என்றார்.
வரலாறு என்ன?
'வெஸ்ட் நைல்' எனும் 'க்யூலெக்ஸ்' வகை கொசுக்களால், இந்நோய் ஒருவரிடத்திலிருந்து மற்றொவருக்குப் பரவும். முதன் முதலில், 1937ல் உகாண்டாவில் கண்டறியப்பட்டது. இந்தக் காய்ச்சல், இந்தியாவில் முதன் முதலில் கேரளாவில் 2011-ல் கண்டறியப்பட்டது. இதையடுத்து, மலப்புரத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன், 2019ல் இந்தக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளான்.