கோவில் வருமானத்தை கையாள்வது தவிர அறநிலையத்துறையின் பொறுப்பு என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி
மதுரை:கோவில்கள் வாயிலாக கிடைக்கும் வருமானத்தை கையாள்வதை தவிர, கோவில்களை பராமரிப்பதில் அறநிலையத்துறையின் பொறுப்புகள் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய இணை கமிஷனருக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருநெல்வேலி முன்னீர்பள்ளம் சுந்தரவேல் தாக்கல்செய்த பொதுநல மனு:சேரன்மகாதேவியில் ராமசாமி பெருமாள் கோவில் அறநிலையத்துறையின் பராமரிப்பில் உள்ளது. வளாகத்தில் கற்கள், முட்செடிகள் நிரம்பியுள்ளன. தரைத்தளம் அமைக்க தரமான கட்டு மான பொருட்களை பயன்படுத்தவில்லை. விஷ்ணு சகஸ்ரநாமம், வெங்கடேச சுப்ரபாதம், திருநாமம் தினமும் காலை, மாலை ஒலிக்க வேண்டும். கோவில் நடை திறக்கும் மற்றும் நடை சாற்றும் நேரம் குறித்து அறிவிப்பு இடம்பெற வேண்டும். கோவிலை புனரமைக்க வலியுறுத்தி திருநெல்வேலி கலெக்டர், அறநிலையத்துறை இணை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: கோவில்கள் வாயிலாககிடைக்கும் வருமானத்தை கையாள்வதை தவிர, கோவில்களை பராமரிப்பதில் அறநிலையத்துறையின் பொறுப்புகள் குறித்து, அதன் திருநெல்வேலி இணை கமிஷனர் அக்., 15ல் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டது.