உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வங்கக்கடலில் வழக்கத்திற்கு மாறாக அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு ஏன்?

வங்கக்கடலில் வழக்கத்திற்கு மாறாக அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு ஏன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வங்கக்கடலில் வழக்கத்துக்கு மாறாக, தென்மேற்கு பருவமழை காலத்தில், அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.பொதுவாக நம் நாட்டில், ஜூன் முதல் செப்டம்பர் இறுதி வரை தென்மேற்கு பருவமழை காலம். தென்மேற்கு பருவக்காற்று, அக்டோபர் இரண்டாவது வாரத்தில் விலகும் போது தான், வடகிழக்கு பருவமழை துவங்கும். வடகிழக்கு பருவமழை காலத்தில் தான், வங்கக் கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும். கடலின் வெப்பநிலை அடிப்படையில், இது, வலுவடைந்து புயலாக மாறும். இப்படி அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாவதன் காரணமாகவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மழை கிடைக்கும். அதேநேரம் தென்மேற்கு பருவமழை காலத்தில், இந்திய பெருங்கடலிலும், அரபிக்கடலிலும் காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகும். இது வலுவடைந்து, குஜராத் வரை செல்லும் போது பருவமழை தீவிரமடையும்.ஆனால், கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை காலத்தில், வங்கக் கடலில், காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதில் ஒரு முறை மட்டுமே, அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, புயலாக மாறி, குஜராத்தில் கனமழை கொட்டியது.வங்கக்கடலில், கடந்த 30 நாட்களில், இரண்டு முறை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழையை கொட்டி தீர்த்துள்ளது.

இதுகுறித்து, தன்னார்வ வானிலை ஆய்வாளர் ந.செல்வகுமார் கூறியதாவது:

பசுபிக் பெருங்கலில் காணப்படும், 'லா நினோ' அமைப்பு காரணமாக, அரபிக்கடல் பகுதியில் குளிர் தன்மை காணப்படுகிறது. இதனால், தென்மேற்கு பருவக்காற்று, தென்னிந்தியாவில் பல்வேறு பகுதிகளில் அதிக மழையை கொடுத்து வருகிறது. அதேநேரம், வங்கக் கடலில் இலங்கை, சுமத்ரா தீவுகள் இடையே வெப்பநிலை, 31 டிகிரி செல்ஷியஸ் ஆக தொடர்கிறது. அந்த பகுதிக்கான இயல்பை விட இது அதிகம் என்பதால், அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட வாய்ப்பாக அமைந்துள்ளது. இதே சூழல் தொடர்ந்தால், வடகிழக்கு பருவமழை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக, இந்திய வானிலை துறை அறிக்கை:பசுபிக் பெருங்கடலில் வெப்ப நிலை அதிகரிப்பது, 'எல் நினோ' என்றும், வெப்பம் குறைவது, 'லா நினோ' என்றும் குறிப்பிடப்படுகிறது. இதில், இந்த ஆண்டு லா நினோ தாக்கம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். குறிப்பாக, அக்டோபருக்கு பின் கடலில் குளிர் தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, எதிர்வரும் குளிர்காலம் மிக நீண்டதாக அமையக்கூடும். இது தொடர்பாக கூடுதல் விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

God yes Godyes
செப் 10, 2024 11:21

ஆழம் அதிகம். அதில் கோடிக்கணக்கான நீர் வாழ் உயிரினங்கள் உள்ளன. காற்றழுத்தம் தாழும் போது அவைகள் இடம் மாறி கூட்டமாக நகரும்.அதனால் கடல் கொந்தளித்து அலைகள் எழும்பும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை