உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுக்கு சங்கருக்கு மணிக்கு ரூ.10,000 இழப்பீடு தருவீர்களா: அரசுக்கு ஐகோர்ட் நீதிபதி கேள்வி தமிழக அரசுக்கு கேள்விகளை அடுக்கிய ஐகோர்ட் நீதிபதி

சவுக்கு சங்கருக்கு மணிக்கு ரூ.10,000 இழப்பீடு தருவீர்களா: அரசுக்கு ஐகோர்ட் நீதிபதி கேள்வி தமிழக அரசுக்கு கேள்விகளை அடுக்கிய ஐகோர்ட் நீதிபதி

சென்னை, :'யு டியூபர் சவுக்கு சங்கர் மீது எந்த அடிப்படையில் குண்டர் சட்டம் போடப்பட்டது; குண்டர் சட்டத்தில் கைது செய்தது தவறு என உத்தரவிட்டால், அவருக்கு மணிக்கு, 10,000 ரூபாய் இழப்பீடு வழங்க தயாரா' என, நீதிபதி அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.தமிழக பெண் காவலர்களை அவதுாறாக பேசியதாக, சவுக்கு சங்கர், மே 4ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏழு வழக்குகள் பதிவான நிலையில், குண்டர் சட்டத்தில் அடைக்க, சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

ஆட்கொணர்வு மனு

இந்த உத்தரவை எதிர்த்து, சங்கரின் தாயார் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'இந்த வழக்கு தொடர்பாக செல்வாக்குமிக்க இருவர் தன்னை அணுகினர்' என்றார். சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்தும் உத்தரவிட்டார். ஆனால், நீதிபதி பாலாஜி, 'இந்த வழக்கில் அரசுதரப்பு பதில் அளிக்க அவகாசம் தர வேண்டும்' என்று உத்தரவிட்டார். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு சென்றது. அரசு பதில் அளிக்க, மூன்றாவது நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி ஜெயச்சந்திரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை மட்டுமே மூன்றாவது நீதிபதி ஆய்வு செய்ய வேண்டும். 'புதிதாக விசாரணை நடத்த வேண்டியதில்லை. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டதால், ஏற்கனவே நீதிபதி பாலாஜி வழங்கிய உத்தரவின் அடிப்படையில், இது பிறப்பிக்கப்பட்டு உள்ளதோ என, யூகிக்க வேண்டியுள்ளது. மீண்டும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கை மாற்ற வேண்டும்,'' என்றார்.அப்போது குறுக்கிட்டு, சங்கர் தாயார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், ''மீண்டும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கை மாற்றினால், நீதிமன்றத்தின் நேரம் விரயமாகும்,'' என்றார்.பின், நீதிபதி ஜெயச்சந்திரன் கூறியதாவது: சங்கர் மீது எந்த அடிப்படையில் குண்டர் சட்டம் போடப்பட்டது என்பதை நீதிமன்றம் அறிய விரும்புகிறது. இந்த உத்தரவு சட்டப்படி பிறப்பிக்கப்படவில்லை என, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவில் கூறியுள்ளார். எனவே, இதை முடிவு செய்ய, போலீஸ் கமிஷனர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வது அவசியம். நீதிமன்ற தீர்ப்புகளை மட்டும் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம், 3வது நீதிபதிக்கு இல்லை. தனிநபர்களின் சுதந்திரம் முக்கியம். குண்டர் சட்டத்தில் அடைத்தது சரியா என, நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும்.

விசாரணை

ஒருவேளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது தவறு என கோர்ட் முடிவெடுத்தால், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து ஒவ்வொரு மணி நேரத்துக்கு, 10,000 ரூபாயை அவருக்கு அரசு இழப்பீடாக கொடுக்குமா?இவ்வாறு கேள்வி எழுப்பிய நீதிபதி, பிற்பகலில் அரசு தரப்பு பதில் அளிக்கவும் உத்தரவிட்டார். பிற்பகலில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ஜெயச்சந்திரன், ''இந்த வழக்கில் செல்வாக்கு மிக்க இருவர் தன்னை அணுகியதாக கூறிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த வழக்கில் இருந்து விலகியிருக்க வேண்டும்,'' என்றார். தொடர்ந்து அவர் பிறப்பித்த உத்தரவில், ''அரசின் பதில் இல்லாமல் விசாரணையின் அடிப்படையில், அமர்வு நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. அரசு பதில் அளித்தால் மட்டுமே, மேற்கொண்டு உத்தரவுகளை பிறப்பிக்க முடியும். நீதிமன்ற விதிகளின்படி ஆட்கொணர்வு மனுக்களை இரு நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியாக நான் முடிவுகளை எடுப்பதற்கு, உரிய ஆவணங்கள் வேண்டும். அவை இல்லாமல் என்னால் உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது,'' என்றார்.மேலும், சங்கர் மீதான வழக்கை வரும், 12ம் தேதி, ஆட்கொணர்வு மனுக்களை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு பட்டியலிட பரிந்துரைத்து, வழக்கை முடித்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

MADHAVAN
ஜூன் 08, 2024 10:53

இவனுக்கு குண்டர்சட்டம் போதாது என்கோண்டேர் ல கொள்ளவேண்டும், எப்ப பாரு காசுக்காக எல்லோரையும் விமர்சிப்பது,


மேலும் செய்திகள்







புதிய வீடியோ