தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு 100 சிறப்பு சொகுசு பஸ்கள்
சென்னை: 'சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலம் பம்பைக்கு, 100 சிறப்பு சொகுசு பஸ்கள், நவ., 16 முதல் ஜன., 16 வரை இயக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாவின் போது, அதிக அளவில் மக்கள் செல்வர். எனவே, பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தில் இருந்து, நவ., 16 முதல் ஜன., 16 வரை வழக்கமாக செல்லும் பஸ்களோடு, கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இது தவிர, சென்னை கி ளாம்பாக்கம், கோயம்பேடு, திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலுார் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து, கேரளா மாநிலம் பம்பைக்கு, 100 சொகுசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி, டிச., 27 முதல் 30 வரை, கோவில் நடை சாத்தப்படுவதால், இந்த நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படாது. இந்த ஆண்டு பக்தர்கள் அதிக அளவில் செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் தேவைக்கு ஏற்ப, கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், 60 நாட்களுக்கு முன்னதாக, விரைவு பஸ்களில் முன்பதிவு வசதி இருப்பதால், பயணியர் www.tnstc.inஇணையதளம் மற்றும் அதன் செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் . இவ்வாறு அவர்கள் கூறினர்.