தமிழகத்தில் 5 மாதங்களில் மேலும் 1,000 மினி பஸ்கள்
சென்னை:'தமிழகத்தில் அடுத்த ஐந்து மாதங்களில், 1,000 மினி பஸ்கள் இயக்கப்படும்' என, போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் குக்கிராமங்களில் இருந்து சிறிய, பெரிய நகரங்களை இணைக்கும் வகையில், மினி பஸ் திட்டத்தில் மாற்றம் செய்யப் பட்டு உள்ளது. இதன்படி, 25 கி.மீ., துாரம் சிற்றுந்துகள் செல்லும். இதில், 36 சதவீதம் ஏற்கனவே செல்லும் வழித்தடமாகவும், 65 சதவீதம் பஸ் வசதி இல்லாத புதிய வழித்தடங்களும் இணைக்கப்படுகின்றன.தமிழகத்தில் மொத்தம், 2,857 வழித்தடங்கள் கண்டறியப்பட்டன. இதில், 2098 வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக, 539 மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்த இரு வாரங்களில், 559 மினி பஸ்கள் இயக்கப்பட உள்ளன. எஞ்சியுள்ள, 1,000 மினி பஸ்களும், அடுத்த ஐந்து மாதங்களில் இயக்கப்படும்.இந்த மினி பஸ்கள் பயன்பாட்டுக்கு வரும் போது, சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில், பொதுமக்களுக்கு இணைப்பு பஸ் வசதி கிடைக்கும். குறிப்பாக, குடியிருப்பு பகுதிகளில் இருந்து பஸ், ரயில், மெட்ரோ ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், மருத்துவ மனைகள், மார்க்கெட் பகுதிகளுக்கு மக்கள் சென்று வர வசதியாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.