உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபாவளிக்கு கூடுதலாக 1,000 ஆம்னி பஸ்கள்

தீபாவளிக்கு கூடுதலாக 1,000 ஆம்னி பஸ்கள்

சென்னை:தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து வழக்கமாக செல்லும் பஸ்களோடு, 1,000க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் சிறப்பு பஸ்களாக இயக்கப்பட உள்ளன.சென்னை, கோவை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து, 2,500க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், சென்னையில் இருந்து மட்டும், 1,000 ஆம்னி பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணியர் தேவைக்கு ஏற்ப, கூடுதலாக ஆம்னி பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது: சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு வழக்கமாக செல்லும், 1,000 ஆம்னி பஸ்களில், 80 சதவீதம் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது. இது தவிர, கூடுதலாக இயக்கப்பட உள்ள, 400 ஆம்னி பஸ்களிலும், 40 சதவீதம் முன்பதிவு முடிந்துள்ளது. சென்னையில் இருந்து, தென் மாவட்டங்கள் மற்றும் பெங்களூரு வழித்தடங்களில் இயக்கப்படும் ஆம்னி பஸ்களில்தான் அதிக அளவில் டிக்கெட் முன்பதிவு நடக்கிறது. வரும் 28, 29ம் தேதிகளுக்கு பயணம் செய்ய இதுவரை, 50,000 டிக்கெட்டுகள் முன்பதிவு ஆகியுள்ளன. கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என, ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம் அறிவுறுத்தி உள்ளோம். தீபாவளியை முன்னிட்டு, வழக்கமாக செல்லும் பஸ்களோடு, 1,000க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி