தமிழகத்தில் 160 இன்ஸ்பெக்டர் பணியிடம் காலிபதவி உயர்வுக்காக 1026 எஸ்.ஐ.,க்கள் காத்திருப்பு
சிவகங்கை:தமிழகத்தில் 160 போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் 13 ஆண்டுகள் கடந்தும் பதவி உயர்வு இல்லாமல் எஸ்.ஐ.,க்கள் காத்திருக்கின்றனர்.தமிழகத்தில் இரண்டாம் நிலை போலீசார் முதல் தலைமை இயக்குநர்கள் வரை 1,75,000 பேர் பணி புரிகின்றனர். சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, ஏழு வருடத்திற்கு மேற்பட்ட தண்டனை வழங்கக்கூடிய குற்றங்களில் வழக்கு விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருதல் உள்ளிட்டவற்றில் இன்ஸ்பெக்டர்கள் பணி முக்கியம்.இந்நிலையில் 160க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் மற்ற இன்ஸ்பெக்டர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. 2011 ல் எஸ்.ஐ.,க்களாக தேர்வு செய்யப்பட்ட 1026 பேர் 13 ஆண்டுகள் முடித்தும் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு கிடைக்குமா என தவிக்கின்றனர்.போலீஸ் அதிகாரி கூறுகையில் ' மற்ற அரசு பணிகளில் சேர்பவர்களுக்கு 5 முதல் 7 ஆண்டுகளில் அடுத்த பதவி உயர்வு கிடைத்து விடுகிறது. போலீசில் மட்டும் பதவி உயர்வு எட்டாக்கனியாக இருந்து வருகிறது.423 போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் இல்லாமல் தவித்து வருகின்றனர். ஒரு இன்ஸ்பெக்டர் இரண்டு, மூன்று போலீஸ் ஸ்டேஷன் பார்ப்பதால் கடும் பணிச்சுமைக்கு ஆளாகிறார். அதிகாரிகளின் அலட்சியத்தாலும் கண்டு கொள்ளாத போக்கினாலும் இந்த நிலை நீடிக்கிறது. அரசு நிதிச்சுமை பாராது 423 எஸ்.ஐ.,க்கள் தர நிலையில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களை இன்ஸ்பெக்டர் தரத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.ஐ.,க்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றார்.