ஆயத்த ஆடை ஏற்றுமதி 12% அதிகரிப்பு
புதுடில்லி:பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த மாதத்தில் 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக வர்த்தக அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. போர்களால் தொடரும் செங்கடல் போக்குவரத்து நெருக்கடி மற்றும் அதிக தளவாடச் செலவுகள் உள்ளிட்ட உலகளாவிய சவால்கள் இருந்தாலும், ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி 10,458 கோடி ரூபாயாக அதிகரித்தது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை, ஆயத்த ஆடை ஏற்றுமதி 7.12 சதவீதம் அதிகரித்து, 53,037 கோடி ரூபாயாக உள்ளது. சமீப காலமாக ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. ஜப்பான், கொரியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தமும் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என, ஆடைகள் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சிலின் பொதுச்செயலர் மிதிலேஷ்வர் தாக்கூர் கூறினார்.