த.வெ.க.,வில் 120 மாவட்ட செயலர்கள் 19 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம்
சென்னை:தமிழக வெற்றிக் கழகத்தில், 120 மாவட்ட செயலர் பதவிகளை உருவாக்கியுள்ள, அதன் தலைவர் விஜய், முதற்கட்டமாக, 19 மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமித்துள்ளார்.த.வெ.க.,வை துவக்கியுள்ள நடிகர் விஜய், மாவட்ட செயலர் உள்ளிட்ட நிர்வாகிகளை நியமனம் செய்யாமல் இருந்து வந்தார்.ரசிகர் மன்றத்தில் இருந்த பலரும் பதவி களை எதிர்பார்த்து, கட்சிக்காக பணத்தை செலவழித்து வருகின்றனர்.இதனால், யாரை மாவட்ட நிர்வாகிகளாக நியமிப்பது என்பதில், அவருக்கு ஏற்பட்ட குழப்பமே காரணம் என்று சொல்லப்பட்டது.கடந்த இரண்டு மாதங்களாக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்றும், பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு வரவழைத்தும், மன்ற நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் ஆலோசனை நடத்தினார். அதன் அடிப்படையில், 120 மாவட்ட செயலர்களை நியமிக்க, விஜய் முடிவெடுத்து உள்ளார்.அதற்காக தேர்வு செய்யப்பட்டவர்களை, சென்னை தலைமை அலுவலகத்திற்கு நேற்று அழைத்து, தனித்தனியாக விஜய் ஆலோசனை நடத்தினார். அப்போது, பொதுச்செயலர் ஆனந்த் உள்ளிட்ட யாரும் அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. பின், முதற்கட்டமாக, 19 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வெள்ளி நாணயங்களை வழங்கி, விஜய் வாழ்த்து கூறினார். அடுத்த, 13 மாதங்களுக்கு கட்சி வளர்ச்சி பணிகளை மட்டுமே கவனிக்க அறிவுறுத்தினார்.புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக, விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை:கட்சியின் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டும், கட்சிப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும், அமைப்பு ரீதியாக, 120 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு உள்ளன. முதற்கட்டமாக, 19 மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.புதிய நிர்வாகிகளுக்கு கட்சியினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அரியலுார், ராணிப்பேட்டை, ஈரோடு, கடலுார், கரூர், கள்ளக்குறிச்சி, கோவை, சேலம் தஞ்சாவூர், நாமக்கல் மாவட்டங்களை, கட்சி ரீதியாக 19 மாவட்டங்களாக பிரித்து, மாவட்ட செயலர், இணை செயலர், பொருளாளர், இரண்டு துணை செயலர்கள், 10 செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
விஜய்க்கு கவர்னர் அழைப்பு
குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை ராஜ்பவனுக்கு அழைத்து விருந்தளிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. கவர்னர் ரவி, நாளை அளிக்கும் இந்த விருந்தை புறக்கணிப்பதாக, தி.மு.க., கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், த.வெ.க., தலைவர் விஜய்க்கு, கவர்னர் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.