இலங்கையில் இருந்து திரும்பிய 13 மீனவர்கள்
சென்னை: இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட, 13 மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தனர்.மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால் பகுதியை சேர்ந்த, 13 மீனவர்கள், கடந்த ஜனவரி 27ம் தேதி, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில், காரைக்காலை சேர்ந்த செந்தமிழ், 27, என்பவருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. கைதான மீனவர்கள், இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், 13 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.இலங்கையில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள், இலங்கை அரசுடன் பேச்சு நடத்தினர். அதைத்தொடர்ந்து, இலங்கை நீதிமன்றம் மீனவர்களை விடுவித்தது.விடுவிக்கப்பட்ட மீனவர்கள், விமானத்தில் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தனர். அங்கிருந்து அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். துப்பாக்கி சூட்டில் காலில் காயமடைந்த மீனவர் மட்டும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.