உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 28 மாவட்டங்களில் 13,700 ஏரிகள் புதுப்பிப்பு

28 மாவட்டங்களில் 13,700 ஏரிகள் புதுப்பிப்பு

சென்னை:தமிழகத்தில் சிறு பாசனத்துக்கு பயன்படுத்தப்படும், 13,700 ஏரிகளை சீரமைக்கும் பணிகளை, ஊரக வளர்ச்சி துறை துவக்கி உள்ளது.தமிழகத்தில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான நீர்நிலைகள் இருந்தாலும், இதில், 40,000 நீர்நிலைகளே பிரதானமாக பட்டியலிடப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலானவை நகர்ப்புற உள்ளாட்சிகள், நீர்வளத்துறை, வருவாய் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. ஊரகப் பகுதிகளில், 13,700 ஏரிகள் சிறு பாசன பயன்பாட்டில் உள்ளன.போதிய நிதி வசதி இல்லாததால், ஊராட்சிகளால் ஏரிகளை முறையாக பராமரிக்க முடியவில்லை. பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிப்பாளர்களால் அழியும் நிலையிலும் உள்ளன.இந்நிலையில், 100 ஏக்கருக்கு குறைவான பரப்பளவில், சிறு பாசன பயன்பாட்டில் உள்ள ஏரிகளை புதுப்பிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வாயிலாக, ஏரிகளை சீரமைக்க டெண்டர் கோரும் பணிகள் துவங்கி உள்ளன. முதற்கட்டமாக, 28 மாவட்டங்களில், ஊராட்சி ஒன்றியத்துக்கு, இரண்டு முதல் நான்கு ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு, புதுப்பிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !