மேலும் செய்திகள்
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
2 hour(s) ago
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
2 hour(s) ago
திருவான்மியூர் : வியாபார விருத்திக்காக, 200 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாக ஆசை காட்டி, பருப்பு வியாபாரியிடம், 35 லட்ச ரூபாயைச் சுருட்டிய, காரைக்குடி மோசடி மன்னனை, திருவான்மியூர் போலீசார் கைது செய்தனர்.
பெசன்ட் நகர், கலா÷க்ஷத்ரா காலனி, சீவகம் தெருவைச் சேர்ந்தவர் மூசுக்குட்டி. இவரின் மகன் முகம்மது,44. பருப்பு மொத்த வியாபாரம் செய்து வந்தார். கடந்த ஓராண்டாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. தனது தொழிலை விருத்தி செய்ய, பெரிய தொகையை வட்டிக்குக் கடன் கொடுப்போர் குறித்து, விசாரித்து வந்தார். அப்போது, முகம்மதுவின் நண்பர் ஷாஜி என்பவர் காரைக்குடி, திலகர் நகர், வள்ளுவர் தெருவைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் வேந்தன் என்ற தென்னக வேந்தன்,69, என்பவரை அறிமுகப்படுத்தினார்.வேந்தன், ஸ்ரீஅழகு சாய் டிரஸ்ட் நடத்தி வருவதாகவும், வியாபார விருத்திக்காக கோடிக்கணக்கில் குறைந்த வட்டிக்குக் கடன் கொடுப்பதாகவும் கூறினார். மேலும், தனது டிரஸ்ட் மூலம், 200 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார். அந்தத் தொகை பெறுவதற்கு, காப்பீட்டுத் தொகையாக, முன்பணமாக மூன்று கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றார். அதற்கு முகம்மது, தன்னால் அவ்வளவு பெரிய தொகை தர முடியாது என்று கூறியுள்ளார்.இதையடுத்து, வேந்தன், 'நீங்கள் முழுத் தொகையையும் உடனடியாகச் செலுத்த வேண்டாம். முதலில், 35 லட்ச ரூபாய் கொடுங்கள். அதன் பிறகு, நான் கொடுக்கும் தொகையில், நீங்கள் தரவேண்டிய காப்பீட்டுத் தொகையைக் கழித்துக் கொள்கிறேன்' என்றார்.
வேந்தனின் சாதுர்யமான பேச்சை நம்பி, 35 லட்ச ரூபாயை கடந்த சில மாதங்களுக்கு முன் கொடுத்துள்ளார். பணம் கொடுத்த சில நாட்கள் கழித்து, கடன் தொகையைக் கேட்டபோது, 'தற்போது, தேர்தல் வருகிறது. அதனால், இந்த பெரிய தொகையை உங்களுக்கு கொடுக்க இயலாது. எனவே, தேர்தல் முடிந்த பின், அந்த தொகையை தருகிறேன்' என்று கூறியுள்ளார்.தேர்தல் முடிந்த பின், வேந்தனிடம் கடன் தொகையை கேட்டுள்ளார். அனால், அவர் பணம் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். வேந்தன் மோசடி செய்வதாக முகம்மது நினைத்தார். 'எனக்குக் கடன் தொகை வேண்டாம். நான் கொடுத்த பணத்தைத் திருப்பித் தாருங்கள்' எனக் கேட்டார். தேதி குறிப்பிடாமல், 30 லட்ச ரூபாய்க்கு காசோலை கொடுக்கப்பட்டது. அது, பணம் இல்லாமல் திரும்பி வந்தது.பின், தான் கொடுத்த பணத்தைத் திரும்பிக் கொடுக்கும் படி, முகம்மது அடிக்கடி வேந்தனை வற்புறுத்தி வந்தார். இதில், ஆத்திரமடைந்து, தன் மகன்கள் மற்றும் அடியாட்கள் சிலருடன், சென்னை வந்து வேந்தன், முகம்மதுவை மிரட்டியுள்ளார்.
தனது பணம் திரும்பக் கிடைக்காது என்பதை ஊர்ஜிதம் செய்த முகம்மது, போலீசில் புகார் செய்தார். இது குறித்து, அடையாறு உதவி கமிஷனர் மோகன்ராஜ் தலைமையில், திருவான்மியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்கு பதிந்து, வேந்தனை அழைத்து வந்து விசாரணை நடத்தினார். இதில், அவர் முகம்மதுவிடம் பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. மேலும், வேந்தன் பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றுத் தருவதாக மோசடி செய்ததும், அவர் மீது தேவகோட்டை உள்ளிட்ட பல போலீஸ் ஸ்டேஷன்களில், 16க்கும் மேற்பட்ட வழக்கு பதிந்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, வேந்தனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
போலீசாரிடமே 'டுபாக்கூர்' விட்ட மோசடி மன்னன் : காரைக்குடி மோசடி மன்னனை, போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், அவர் தன் பெயர் மெய்யப்பன் என்ற அழகப்பன் எனவும், தனது முகவரியையும் தெளிவாகக் கூறினார். போலீசார் அவரிடம் விசாரணையை முடித்த பின், அவர் எவ்வளவு மோசடிகளைச் செய்துள்ளார் என்பது குறித்து, காரைக்குடி போலீசாரிடம் விசாரித்தபோது, அவரது உண்மையான பெயர் வேந்தன் என்ற தென்னகவேந்தன் என்று தெரிந்ததும், போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவர் மீது 16 வழக்குகளுக்கு மேல் உள்ளதும், கடந்த 82ம் ஆண்டு முதல் சரித்திரப் பதிவேட்டில் கண்காணிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, தென்னகவேந்தனிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
2 hour(s) ago
2 hour(s) ago